டிஜிட்டல் சுகாதாரம் தொடர்பான பொதுநலவாய மத்திய நிலையம் நேற்று முற்பகல் லண்டன் நகரில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்துகொண்டார்.

2013ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 23 ஆவது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்த மத்திய நிலையத்தை தாபிப்பது தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் வஜிர திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு 2017ஆம் ஆண்டு மே மாதம் பொதுநலவாய சுகாதார அமைச்சர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பொதுநலவாய கொள்கை சட்டகத்திற்குள் அது உள்ளடக்கப்பட்டது.

டிஜிட்டல் சுகாதாரம் தொடர்பான பொதுநலவாய மத்திய நிலையத்தின் தலைவராக பேராசிரியர் வஜிர திஸாநாயக்க தலைமைத்துவத்தை வழங்குகிறார்.

இந்த புதிய மத்திய நிலையத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் தலைமை உரையை மோல்டா நாட்டின் பதில் பிரதமரும் சுகாதார அமைச்சருமான கிறிஸ்ரோபர் பேர்னினால் நிகழ்த்தப்பட்டது.

இந்த விசேட நிகழ்வுக்கு வாழ்த்துச் செய்தியொன்றினை அனுப்பி வைத்துள்ள உலக சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரஸ் அதானம், 

உலக சுகாதார தாபனத்தின் முக்கிய நோக்கம் பூகோள சுகாதார சேவைகள் குறித்து கவனம் செலுத்துவதும், நிதி ரீதியான அசௌகரியங்கள் ஏற்படுவதற்கு இடமளிக்காது உயர்தரம் வாய்ந்த சுகாதார சேவையை வழங்கும் உலகை உருவாக்குவதாகும் என்று குறிப்பிட்டார்.

பொதுநலவாய அமைப்பின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லாண்ட் சுகாதார சேவை மற்றும் உபசரிப்புச் சேவைகளை வழங்குவதில் டிஜிட்டல் சுகாதார முறைமை மிகவும் முக்கியமானதொரு பகுதியாகும் எனக் குறிப்பிட்டார்.