தந்தை உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்களால் கடந்த 17 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்ப்ட்டு வந்த  23 வயதான யுவதி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேக நபர்கள் ஐவரை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தனக்கு ஐந்து வயதாக இருக்கும் போது முதலில் தனது தந்தையால் தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதன்பின்னர் தனது மூத்த சகோதரனினாலும், மைத்துனன், மைத்துனின் சகோதரன், சித்தியின் மகன் ஆகியோர் தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும்    யுவதி பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ள நிலையிலேயே அந்த ஐவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும்  தெரியவருவதாவது 

பயாகல பொலிஸ் நிலையத்துக்கு சென்ற 23 வயதுடைய யுவதி ஒருவர், அங்கு மகளிர் விவகாரம் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் கையைப் பிடித்தவாறு அழுது புலம்பி தனது சோகக் கதையை கூறியுள்ளார். இதனையடுத்து குறித்த யுவதியை பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வாவிடம்  பெண் பொலிஸ் காண்ஸ்டபிள் அழைத்துச் சென்றுள்ளார்.

இதன் போது பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும் குறித்த யுவதி தனது சோகக் கதையை தெரிவித்துள்ளார். இதனையடுத்து யுவதியின் முறைப்பாடு அவரது வாக்கு மூலத்துக்கு அமைவாக பொலிஸ் பதிவுப் புத்தகத்தில்  பதினாறரை பக்கங்களில்  பதிவு செய்யப்பட்டுள்ளன. தான் தற்போது  திருமணம் முடித்துள்ள நிலையில் தனது கணவர் தன்னை தற்போது சந்தேகப் பட ஆரம்பித்துவிட்டதாகவும் அதனாலேயே தான் பொலிஸ் நிலையம் வந்ததாகவும் குறித்த யுவதி அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதியை விஷேட வைத்திய பரிசோதனைகளுக்காக களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கு அனுப்பிய பொலிஸார் அந்த யுவதியை சிறப்பு மன நல வைத்தியர் ஒருவரிடமும் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இந் நிலையிலேயே சந்தேகத்தின் பேரில்  முறைப்பாட்டில் பெயரிடப்பட்டுள்ள ஐவரையும் பொலிஸார் கைது  செய்து நீதிமன்றில் ஆஜர்  செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் பயாகல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் துஷார சில்வா தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.