36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் என தொடர்ந்து 3 வெற்றிப்படங்களைக் கொடுத்து முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு "காற்றின் மொழி" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

பயணம், கௌரவம், உப்புக்கருவாடு, பிருந்தாவனம் என வரிசையாக தோல்விப்படங்களை கொடுத்த இயக்குநர் ராதா மோகன் மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து பணியாற்றும் படம் தான் காற்றின் மொழி.

ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற "துமாரி சுலு" என்ற படத்தை "காற்றின் மொழி" என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வெற்றிப் பெறவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் ராதா மோகன்.

இந்த படத்தில் ஜோதிகா கதையின் நாயகியாகவும், அவருக்கு கணவராக நடிகர் விதார்த்தும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் மற்றொரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் தெலுங்கு நடிகையான லட்சுமி மஞ்சு நடிக்கிறார். ஜி தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள தனியார் பண்பலை வானொலி நிலையத்தில் தொடங்கவிருக்கிறது.