செவ்வாய் கிரகத்திற்கு முதன் முதலாக செல்பவர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என நாசாவின் தலைமை விண்வெளி பயிற்சியாளர் கூறியுள்ளார்.

சுமார் 360 கோடி வருடங்களுக்கு முன்பு செவ்வாய் கிரகம் இன்றைய பூமியைப் போல உயிரினங்கள் வாழ எல்லாத் தகுதியுடன் மிகவும் செழிப்பாக இருந்துள்ளது. உயிரினங்களும் வாழ்ந்துள்ளன.

அதன்பின் செவ்வாய்கிரகத்தில் மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதிய காரணத்தினால் அங்கு வாழ்ந்த அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கலாம் என நம்பப்பட்டு வருகின்றது.

இதற்கான சான்றாக இன்றும் செவ்வாய் கிரகத்தில் விண்கல் மோதிய சுவடு காணப்படுகின்றது. இவ்வாறான மோதலினால் சிதறிய விண்கற்களில் 7.5 சதவிதம் பூமியை வந்தடைந்தன எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க விஞ்ஞானிகள் 1984ஆம் ஆண்டு அண்டார்டிக்காவில் Allan Hills 84001 (ALH84001) என்ற 1.95kg எடை கொண்ட விண்கல்லை கண்டெடுத்தார்கள்.

இது செவ்வாயில் ஏற்பட்ட மோதலினால் சிதறி பூமிக்கு வந்த கற்களில் ஒன்றாக இருக்கலாம் என யூகித்தனர். 1996ஆம் ஆண்டு நாசா விஞ்ஞானி டேவிட் மெக்கி  என்பவர் இதில் “நானோ பக்டீரியாவின்” எச்சம் இருப்பதை கண்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து செவ்வாய்கிரக ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. மனிதர்களாகிய நமக்கு செவ்வாய் கிரகம் தான் அடிப்படை என பல விஞ்ஞானிகள் தீர்க்கதனமாக நம்புகின்றார்கள். இதைத் தொடர்ந்து செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட தொடங்கின.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம்  திகதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. மங்கள்யான் விண்கலம் 2014 ஆம்  ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செவ்வாய் கிரகத்தை சுற்றி  ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் "கியூரியாசிட்டி ரோவர்" விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன், ரஷ்யா ஆகியவை கூட்டாக இணைந்து புதிய விண்கலத்தை இன்று கிரகத்துக்கு அனுப்புகின்றன. இந்த விண்கலம் ஒக்டோபர் 19ஆம் திகதி  செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.  

செவ்வாய் கிரகத்தில் எதிர் வரும் 2039ஆம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் நாசா வைத்துள்ளது .

பல பெண் விண்வெளி வீரர்கள் இருந்த போதிலும் ஆண்கள் மட்டுமே சந்திரனில்  நடந்து சென்றனர் இப்போது நாசாவின் விண்வெளி பயிற்சியாளர்  செவ்வாய் கிரகத்தில் கால்பதிக்கும்  முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஜோன்சன் விண்வெளி மையத்தைச் சேர்ந்த மூத்த நாசா என்ஜினியர் அலிசன் மக்கிண்டியர், 

"ஒரு டசன் ஆண்கள் சந்திரனில் ஏற்கனவே நடந்துவிட்டனர். விண்வெளி  இயக்குனர் ஒரு பெண், முன்னாள் பிரிவு தலைவர் ஒரு பெண், அவர்கள் பெண் விண்வெளி வீரர்கள், ஆனால் அவர்கள் இன்னும் சந்திரனுக்கு செல்லவில்லை.

செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் முதல் நபர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும்.  பெண் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் உள்ளனர் ஆனால் பெண்களை விட அதிக ஆண்களை அனுப்பியிருக்கிறார்கள்". என கூறியுள்ளார்.