வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெப்பட்டிபொல பகுதியில் நேற்று மாலை 3.30 மணியளவில் வேன்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 17 பேர் படுங்காயங்களுக்குள்ளாகி வெலிமடை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிமடை - நுவரெலியா பிரதான வீதியில் கதிர்காமம் பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் நுவரெலியாவிலிருந்து கதிர்காமம் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றுமொரு வேனும் கெப்பட்டிபொல சந்தியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் இரு வேன்களிலும் பயணித்த 17 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி வெலிமடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அதில் 10 பேர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக வேகம் மற்றும் கட்டுப்பாடு இல்லாததன் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய இரு வேன்களையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சாரதிகளையும் கைது செய்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் வெலிமடை பொலிஸார் தெரிவித்தனர்.