ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் புதிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட உடன்படிக்கை அடுத்த இரண்டு வருடகாலத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய வேலைத்திட்டங்களை  உள்ளடக்கியதாக காணப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் , இரு கட்சிகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் புதிய உடன்படிக்கை  கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டே புதிய உடன்படிக்கையை உருவாக்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடரும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் , ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சரத் அமுனுகம குழுவினர் இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகளை உருவாக்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.