கதுவா கற்பழிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பொலிஸ் பாதுகாப்புடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நீதிமன்றத்தில் விசாரணை தொடங்குகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கதுவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை மறைத்தும், அழித்தும் திசை திருப்பியதாக மூன்று பொலிஸார், ஒரு சிறுவன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வை சேர்ந்த இரு மந்திரிகள் கலந்துகொண்டனர். பின்னர் அவர்கள் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், கதுவா முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வழக்கு விசாரணை தொடங்குகிறது. இதில் 7 பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து மட்டும் இந்த அமர்வில் விசாரிக்கப்படுகிறது. 

சிறுவன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக சிறார் சட்டத்திற்கு உட்பட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். எனவே, அவன் மீதான விசாரணையை நீதிபதி நிறுத்தி வைப்பார் என தெரிகிறது. 

இந்த வழக்கை நடுநிலையாக நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுப்பதற்காக அரசு தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கில் நீதித்துறையின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் செயல்பட்ட வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 13ஆம் திகதி கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ஜம்மு பார் அசோசியேசன் மற்றும் கத்துவா பார் அசோசியேசனையும் கண்டித்தது. எனவே, விசாரணை எந்த இடையூறும் இன்றி சீராக செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.