167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவை ஒன்று இன்று  காத்தான்குடி கிழக்கு பலநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

167பி புதிய காத்தான்குடி கிழக்கு சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவர் எம்.ஏ.சீ.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையை காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நடமாடும் சேவையில் ஆயுர்வேத வைத்தியப் பிரிவு, பொலிஸ் பிரிவு, பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுப் பிரிவு, தேசிய அடையாள அட்டைக்காக முதன்முறையாக விண்ணப்பித்தல், தேசிய அடையாள அட்டையைப் புதிப்பித்தலுக்காக விண்ணப்பித்தல், தொலைந்த அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தல் போன்ற பிரிவுகளில் பொது மக்களுக்கு சேவைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பித்தலின் போது பொலிஸ் முறைப்பாடு, மற்றும் புகைப்படம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

மேற்படி நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக பொது பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமாதான நீதவான் ஆகியோர் தங்களது சேவைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)