இந்திய அரசியல் சாசன அமைப்பின் தந்தை எனப் போற்றப்படும் பீமராவ் அம்பேத்காரின் 127 ஆவது பிறந்த நாள் விழா இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அம்பேத்காரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் முதல் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் பங்குபற்றி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதே போல் சென்னை கோயம்பேட்டில் அமைந்திருக்கும் அம்பேத்காரின் சிலைக்கு திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், அகியஇந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்ததாவது,

அம்பேத்கார் வகுத்த அரசியல் சட்டத்திற்கு குந்தகம் விளைவிக்க முயன்றால் தடுப்போம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்த தீர்ப்பு தொடர்பாக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.’ என்றார்.