ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் விதார்த்.

மைனா, அஜித்தின் வீரம், ஆள், குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விதார்த். 

அண்மையில் வெளியான கொடி வீரன் படத்திலும், ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படத்திலும் நடித்திருந்தார் விதார்த். 

இந்நிலையில் இவரின் நடிப்புத்திறமையை பயன்படுத்திக்கொள்ள இயக்குநர் ராதா மோகன் தீர்மானித்தார்.

அவரின் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற துமாரி சுலு படத்தின் தமிழ் ரீமேக் தயாராகி வருகிறது. இதில் ஜோதிகாவின் கணவர் கேரக்டரில் விதார்த் நடிக்கிறார். 

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் திரையுலக வேலை நிறுத்தம் முடிவடைந்ததும் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை பிரபல விமர்சன எழுத்தாளர் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார்.