மஸ்கெலியா பிரதேச சபையின் கன்னியமர்வு இன்று காலை 10.20 மணியளவில் சபையின் தவிசாளர் ஜீ.சென்பகவள்ளி தலைமையில் மஸ்கெலியா பிரதே சபையில் ஆரம்பமானது.

இதன்போது, சபைக்காக தெரிவு செய்யப்பட்ட ஆளுங்கட்சி, எதிர்கட்சி தரப்பில் 16 உறுப்பினர்கள் வருகை தந்திருந்தனர். 

எதிர்தரப்பான ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஒரு பெண் உட்பட 8 உறுப்பினர்கள் வருகை தந்திருந்த போதிலும், இதில் குறித்த பெண்ணை தவிர ஏனைய 7 பேரும் கைகளில் கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

இந்த கறுப்பு பட்டி அணிந்தமைக்கான காரணத்தை விளக்கிய எதிரணியான ஐக்கிய தேசிய கட்சியினர் சபையின் தவிசாளர்க்கோ அல்லது இந்த சபைக்கோ எதிராக கறுப்பு பட்டி அணியவில்லை. மாறாக இச்சபை உருவாக்கத்திற்கு கடந்த 28ம் திகதி இடம்பெற்ற வாக்கெடுப்புக்கு எதிராகவும், உள்ளூராட்சி சபை ஆணையளருக்கு எதிராகவும் கறுப்பு பட்டி அணிந்ததாக தெரிவித்த அவர்கள் கடந்த 28ம் திகதி மஸ்கெலியா நகரில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிராகவும் கறுப்பு பட்டி அணிந்து இந்த முதலாவது அமர்வில் கலந்து கொண்டதாக தெரிவித்தனர்.

நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வணக்கம் தெரிவித்த நிலையில் சபை அமர்வு ஆரம்பமானது. இதன்போது சபை அமர்வுக்காக வருகை தந்த உறுப்பினர்களுக்கு மலர் மாலைகளும் இட்டு வரவேற்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, சபை அமர்வின் போது உறுப்பினர்களுக்கான கருத்துகள் பகிரும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதில் உறுப்பினர்கள் தத்தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் கருத்துகள் பகிரப்பட்ட வேளையில் ஐக்கிய தேசிய கட்சி தரப்பில் தெரிவான கே.எல்.ஏ. ரஞ்சனி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பேசுவதற்காக எழுந்த பொழுது ஐக்கிய தேசிய கட்சி தரப்பினர் சார்பில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. கடந்த 28ம் திகதி சபை ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு இவர் வராததனால் ஏற்பட்ட குழப்ப நிலைமையை சுட்டிக்காட்டி இங்கு கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இருந்த போதிலும், தனது கன்னி உரையை நிகழ்த்திய இந்த பெண் உறுப்பினர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தான் விலை போனாதாக என் மீது ஐக்கிய தேசிய கட்சியினர் குற்றம் சுமத்தினார்கள். அவ்வாறு இடம்பெறவில்லை என தெரிவித்த இவர். நான் ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்தவர் தான். நான் யாருக்கும் விலை போகவில்லை. ஏனைய உறுப்பினர்கள் போல் நான் விலை போகவும் மாட்டேன் என்றார்.

எனக்கு ஏற்பட்ட சுகவீனம் காரணமாகவே அன்றைய தினம் நான் சபை ஆரம்பிப்பு நிகழ்வுக்கு வரமுடியாமல் போய்விட்டது என தெரிவித்தார். இதன்போது எதிரணியான ஐக்கிய தேசிய கட்சியினர் இவரை ஏசிய வண்ணமே இருந்தனர்.

கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் சபை தவிசாளரை பாராட்டியும், தமது உரையை நிகழ்த்தினார்கள். மஸ்கெலியா பிரதேச சபைக்கு பெண் ஒருவர் தவிசாளராக நியமிக்கப்பட்டமையை வரவேற்பதோடு, இதற்கு காரணம் நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 25 வீத பெண்கள் அரசியல் ஈடுப்பட வேண்டும் என்ற கோரிக்கையே காரணம் என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் தங்களது கருத்துகளில் சுட்டிக்காட்டினர்.

மஸ்கெலியா பிரதேச சபைக்கான இரண்டாவது அமர்வு அடுத்த மாதம் 28ம் திகதி இடம்பெறும் என சபையின் உதவி தவிசாளர் பெரியசாமி பிரதீபன் அறிவித்தார்.