(இரோஷா வேலு)

புத்தாண்டை முன்னிட்டு  கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்தோர் தங்கள் ஊர்களுக்கு படையெடுத்து வருவதை இன்று  அவதானிக்கக்கூடியதாகவிருந்தது. பல நாட்கள், மாதங்களுக்கு பிறகும் இன்றையதினம் தங்கள் ஊர்களுக்கு திரும்புவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.  

இதன் காரணமாக நேற்றையதினம் கொழும்பு கோட்டை வியாபார பிரதேசமே மக்கள் வெள்ளத்தால் அலைமோதியதை காணக்கிடைத்தது. தூரப் பிரதேசங்களிலிருந்து கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருந்தோர்  பேரூந்து நிலையம் மற்றும் புகையிரத நிலையத்தில் தங்கள் பயணத்தை தொடர்வதற்காக பல மணிநேரம் காத்திருந்தனர்.  

அதனைப்போன்று, பண்டிகை காலமாகையால் கோட்டை பிரதேசமெங்கும் வியாபாரம் களைகட்டியிருந்தது. தமிழ் சிங்கள புத்தாண்டாகிலும் முஸ்லிம் மக்களும் மும்முரமாக தங்கள் கொள்வனவுகளில் ஈடுபட்டிருந்தனர். 

வியாபார நிலையமெங்கும் கழிவுடன் கூடிய மலிவு விற்பனையும் இடம்பெற்றது.  ஏனைய நாட்களில் அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய பொருட்கள் பண்டிகை காலங்களில் மலிவுடன் கிடைப்பதனால் உற்சாகமாக மக்கள் கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் வீதியெங்கும் சனநெரிசல் ஏற்பட்டதால் வீதி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

பகல் 12 மணிக்கு பிறகு கோட்டை புகையிரத நிலையமும் தனியார் மற்றும் அரச பேரூந்து நிலையமும் மக்கள் வெள்ளமாக திரண்டு இருந்தனர். 

எது எவ்வாறாயினும் விடுமுறையை கழிக்கவென பலர் கொழும்பிலிருந்து தூர பிரதேசம் நோக்கி பயணிப்பதால் எதிர்வரும் சில தினங்களுக்கு கொழும்பு மாநகரம் மிகவும் அமைதியாக காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.