(எம்.சி.நஜிமுதீன்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் இன்னும் வழங்கப்படவில்லை. எனவே அக்கொடுப்பனவை விரைவில் வழங்குவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடுமையான சட்ட திட்டங்களின் பிரகாரம்  உள்ளூராட்சி மன்றத்தேர்தல் கடமைக்கு உத்தியோகத்தர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர். தேர்தல் கடமைக்கு பிரசன்னமாகாத உத்தியோகத்தர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

அதற்கிணங்க 3 வருடகால சிறைத்தண்டனை மற்றும்  ஒரு இலட்சம் ரூபா தண்டம் விதிக்கப்படும் எனவும் உத்தியோகத்தர்களை அறிவுறுத்தினர். ஆகவே பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டனர். எனினும் அவ்வாறு கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை. ஆயினும் தேர்தல் கடமையில் ஈடுபட்ட சகல அதிகாரிகளுக்குமான கொடுப்பனவுள் வழங்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.