சித்திரைப் புத்தாண்டு நெருங்கும் வேளையில் புத்தாண்டுக்கு முன்னரும் புத்தாண்டு வேளையிலும், புத்தாண்டுக்குப் பின்னரும் அது குறித்துப் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை பொலிஸார் பொதுமக்களுக்குத் தந்துள்ளனர்.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளிலும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளன.

பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அப்பிரசுரங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@ புத்தாண்டை ஒட்டிய காலப்பகுதிகளில் வீட்டை விட்டுச் செல்வதாயின் வீட்டுக் கதவு, சாளரம் (ஜன்னல்) போன்றவற்றை நன்றாகப் பூட்டி வைத்து விட்டுச் செல்லுங்கள்,

பணம், மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பெறுமதிமிக்க உடமைகளை பாதுகாப்பாக பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்,

பணக் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிறுவனங்கள், வர்த்தக வியாபார நிலையங்கள் ஆகியவற்றுக்கு வரும் நபர்கள் தொடர்பாக எந்நேரமும் விழிப்பாக இருங்கள்,

உங்கள் பயண வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கும்போது கூட பூட்டி வைத்து விட்டுச் செல்லுங்கள்,

ஏதாவது சம்பவங்கள், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள், நபர்கள் குறித்துத் தெரியவந்தால்  தயக்கமின்றி, தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவித்துக் கொள்ளுங்கள்.

பண்டிகைக் காலத்தில் அறிமுகமான மற்றும் அறிமுகமில்லாத அதிகமானோரின் நடமாட்டங்கள், சனக் கூட்டம் அதிகமாக இருக்கும், அவ்வேளைகளில் நமது பணம், தங்க ஆபரணங்கள், பெறுமதியான உடமைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது.

மக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் என்றும் உங்களோடு இணைந்திருப்பார்கள்.” என்றும் அந்த விழிப்புணர்வுப் பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.