இன்று நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுவின் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்ல பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியினர் வேண்டுகோள் விடுத்துவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அனைத்து அமைச்சர்களும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தினை புறக்கணிக்கவுள்ளனர்.

இதேவேளை,  அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறவேண்டும் என்ற யோசனையை முன்வைத்ததாகவும் அதனை அமைச்சர் எஸ்.பி. திசநாயக்க வழிமொழிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.