கோல்டன் ஐ, டுமாரோ நெவர் டைஸ், த வேர்ல்ட் இஸ் நாட் இனஃப், டை அனதர் டே போன்ற ஜேம்ஸ் பொண்ட் படங்களில் நடித்து பிரபலமானவர் ஹொலிவூட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னன். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக படக்குழுவினரிடம் கேட்டபோது,‘ தனுஷ் நடிக்கவிருக்கும் கதை வெளிநாடுகளில் வாழும் கேங் ஸ்டார்களின் கதை. இதில் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஜேம்ஸ் பொண்ட்டாக நடித்த நடிகர் பியர்ஸ் பிராஸ்னன் பொருத்தமாக இருப்பார் என்று எண்ணி, அவருடைய தொடர்பாளரிடம் தொடர்பு கொண்டு திரைக்கதையை கொடுத்தோம். அதை படித்து பார்த்த அவர் திரைக்கதை பிடித்திருக்கிறது. படபிடிப்பு வெளிநாடுகளில் என்பதால் நடிக்க ஒப்புக்கொள்கிறோம். இருந்தாலும் கால்ஷீட் திகதிகளைப் பற்றி விரைவில் தெரிவிக்கிறோம் என்று பதிலளித்திருக்கிறார்கள்.

இதனால் தனுஷ் நடிக்கும் படத்தில் ஜேம்ஸ் பொண்ட் நடிகர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது என்கிறார்கள் படக்குழுவினர்.

கார்த்திக் சுப்புராஜ் முதலில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கி முடித்தபிறகு தான் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தினை தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரிக்கிறார்.