பிரேசில் முன்னாள் அதிபர் 72 வயதான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவை சிறை பிடிக்க அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை பிரேசிலின் அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா பதவி வகித்தார். அவரது ஆட்சிக் காலத்தில் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவன ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்தது.

சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் லுலாவுக்கு ரூ.6.5 கோடி மதிப்புள்ள வீட்டை அன்பளிப்பாக அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில்  லுலாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து லூயிஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதில் லூயிஸின் சிறை தண்டனை 12 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் லூயிஸ் மீண்டும் மேல்முறையீடு செய்தார்.

"முன்னாள் அதிபர் லூயிஸ் உடனடியாக சரணடைந்து தனது 12 ஆண்டு கால சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது.

இதன்படி அடுத்த ஒரு வாரத்தில் லூயிஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று அந்த நாட்டு பொலிஸ் தரப்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது.