தமிழ் சினிமா வரலாற்றில் என்றும் மறக்கமுடியாத ஒருநபர். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடனக் கலைஞர், உதவி இயக்குநர் என்று அத்துறையின் அனைத்து விடயங்களிலும் படிப்படியாக முன்னேறியது ஒருபுறமிருக்கையில் உலகம் ஏற்றுக்கொள்ளும் நடிகராக தன்னை நிலைநிறுத்திய “உலகநாயகன்” பின்னர் இயக்குநராகவும் கூர்ப்படைந்தார்.

 

கலையன்னையின் தவப்புதல்வன் என்பதற்கு சகல பொருத்தமும் கொண்டிக்கும் அவர் தற்போது தமிழக அரசியல் தளத்தில் பேசுபொருளாகியுள்ளார்.

ஆம், அறுபத்து மூன்று வயதான கமல்ஹாசன் 21-02- 2018 அன்று மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சியின் பெயரை அறிமுகப்படுத்தியதோடு ஆறுகைகள் இணைந்து நடுவில் நட்சத்திரம் உள்ள கட்சியின் சின்னத்தை உற்று நோக்கினால் புதிய தென்னிந்தியாவின் வரைபடம் தெரியும். அதில் உள்ள ஆறு கைகள் ஆறு மாநிலங்களையும், மற்றும் நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். நீங்கள் இடதுசாரியா, வலதுசாரியா என்கிறார்கள், அதனால் தான் மய்யம் என பெயர் வைத்தோம்.

நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களையும்ரூபவ் நீதியையும் மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள கட்சியாகும் என்ற பகிரங்க அறிவிப்புடன் முழுநேர அரசியலுக்குள் பிரவேசித்தார்.

அதனையடுத்து தமிழகத்தின் பலபாகங்களுக்கும் செல்ல ஆரம்பித்து கமல்ஹாசன் மாநாடுகளையும் பிரதான மாவட்டங்களில் முன்னெடுத்துவருகின்றார். அதன் பிரகாரம் மக்கள் நீதி மய்யத்தின் திருச்சி மாநாடு கடந்த 4-04- 2018 நடைபெற்றிருந்த நிலையில் அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அதற்கு முன்தினமான 03-04- 2018 அன்று சென்னை எழும்பூர் புகையிரத நிலையத்திலிருந்து திருச்சி நோக்கி பிற்பகல் 1.45இற்கு பயணத்தினை ஆரம்பித்த “வைகை எக்பிரஸ்” புகையிரத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் பயணித்தார். 

இப்பயணத்தின் போது வீரகேசரிக்கு விசேட செவ்வியொன்றினை வழங்கினார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி:- சினிமாத்துறையின் ஒட்டுமொத்த பரப்பிலும் உச்சம் தொட்டவராக இருக்கும் நீங்கள் கலைஞர் கருணாநிதியின் முதுமை, ஜெயலலிதாவின் மறைவு இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தினை பயன்படுத்தி தமிழக அரசியலில் களத்தினுள் பிரவேசித்துள்ளீர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் உங்களது கருத்து என்ன?

பதில்:- நான் சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு பிரவேசிக்காது இருந்திருந்திருந்தால் என்னுடைய நேர்மைத் தன்மை எந்தளவுக்கு பளிச்சிட்டிருக்கும் என்பது எனக்கு தெரியாதுள்ளது. தற்போது அரசியலில் பிரவேசித்துள்ளமையால் அந்த நேர்மைத் தன்மை எந்தளவுக்கு பாதிக்கப்பட்டு விட்டது என்பதும் எனக்கு புரியாதுள்ளது.

ஜனநாயகத்தில் வெற்றிடம் என்பது எவ்வாறு இருக்க முடியும் என்று வெற்றிடம் இருப்பதாக சொன்னவர்களிடத்தில் கேள்வி எழுப்புகின்றேன். வெற்றிடம் காணப்படுவதற்கு சிம்மாசனமா? உள்ளது. அரசு நடந்து கொண்டிருக்கின்றது. வெற்றிடம் என்பது இல்லை. ஆனால் அரசு மக்களுக்காக முறையாக இயங்கவில்லை என்பது தான் எங்களது குற்றச்சாட்டாகவுள்ளது. ஆகவே வெற்றிடம் என்பதை விடவும் இயங்காமை தான் காணப்படுகின்றது.

கேள்வி:- தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்திய அரசியல் தலைவர்களாக அண்ணாத்துரை, எம்.ஜி.ராமச்சந்திரன், கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா ஜெயராம் போன்றவர்கள் காணப்படுகையில் தற்போதைய நிலையில் ஆளுமை குறைபாடு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கின்றீர்களா?

பதில்;- ஆம், ஆளுமைக் குறைபாடு இருக்கின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டும். அதற்காகவே நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். மிக வேகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நாம் பயணித்துக்கொண்டிருக்கும் இந்த புகையிரத்தின் வேகத்தினை விடவும் அதிக வேகத்தில் செல்வதற்கே ஆசைப்படுகின்றேன். முயற்சியும் செய்கின்றேன். 

கேள்வி:- யுத்தத்தின் பின்னரான சூழலில் தொப்புள்கொடி உறவுகளின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள் அதற்கான அடுத்தகட்ட வழிவகைகள் தொடர்பில் உங்களது நிலைப்பாடு என்ன?

பதில்:- முதலில் எதற்காக போர் ஆரம்பிக்கப்பட்டதோ அச்சமயத்தில் நியாயமான போராட்டம் என்று நம்பியவன் நான். இத்தனை உயிரிழப்பு நிகழ்ந்தது என்பதை நியாயமில்லை என்று கருதுகின்றேன். அத்துடன் விடுதலைக்கான போராட்டம் இலக்கை அடையாது இடையிலேயே குலைந்து போனதில் எனக்கு அதிக கோபமுள்ளது.

அது ஒருபுறமிருந்தாலும் தற்போதைய சூழலில் போரை நோக்கி நாம் சிந்திக்க வேண்டியதில்லை. மீண்டும் போரை ஆரம்பிப்பது என்பது மீண்டும் உயிர்ச் சேதத்தினை ஏற்படுத்துவதோடு வாழ்வாதாரத்தினையும் முழுமையாக பாதித்து விடும்.

ஆகவே தற்போதைய அளவில் கிடைத்த உரிமைகளை வலுப்படுத்திக்கொள்வதோடு இருக்கையின் பலத்தின் ஊடாக எனது உறவுகளுக்கான முழுமையான உரிமைகளை பெறுவதற்கு வலுவான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது தான் எனது நிலைப்பாடாகும்.

கேள்வி:- மக்கள் நீதி மய்யத்தின் ஆட்சி தமிழகத்தில் மலருகின்ற போது அதன் தலைவர் என்ற வகையில் ஈழமக்களுக்கான உங்களின் ஆதரவுக்கரம் எவ்வாறு அமையும்?

பதில்:- நிச்சயமாக ஈழ உறவுகளுக்காக எனது பங்களிப்பு நியாயமானதாகவே இருக்கும். ஆனால் பிறிதொரு நாட்டு அரசாங்கத்தின் செயற்பாட்டில் தலையீடு செய்வதற்கு குறிப்பிட்ட வரையறைகள் இருக்கின்றன. அந்த வரையறைகளை கடந்து செயற்படுவதானது ஊறுவிளைப்பதாக அமைந்து விடும்.

எங்கள் நாட்டில் அவ்வாறு யாரும் செயற்படுவார்களாயின் கடுமையான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். அதேபோன்ற நடவடிக்கைகளை அந்த நாடும் எடுப்பதற்கு கடமைப்பட்டிருக்கின்றது என்பதை நான் உணர்கின்றேன். இருப்பினும் நட்பு ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் அன்பு ரீதியாகவும் நாடக்கூடிய ஒரு பிரச்சினையாகும். இந்த விடயத்தினை ஆத்திரத்துடன் நாடினால் அது எனது உறவுகளை பாதித்து விடும். இந்த விடயங்களை கைளும் போது அறிவு சற்று குறைவாக உள்ளவர்களுக்கு அன்புடன் அதனை சொல்லிக்கொடுப்பதற்கு முற்பட வேண்டும். அத்தகைய அனுகுமுறையைச் செய்வேன்.

கேள்வி:- ஈழத்தமிழர்களின் பிரச்சினைகள் தற்போது வரையில் நீறுபூத்திருப்பதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையின் பின்னர் இந்திய வெளியுறவுக்கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் என்பது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- இது விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும். நான் பத்திரிகை நேர்காணலுக்காக அளிக்கும் பதிலை வைத்துக்கொண்டு இந்த விடயத்தினை விவாதித்து முடிவெடுக்க முடியாது. இந்த விடயம் சம்பந்தமாக நாம் நிதானமாக அமர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. 

இந்திய வெளிவிவகார கொள்கை சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் முழு நாடுமே இணைந்து முடிவெடுக்க வேண்டிய விடயமாவுள்ளது. இந்த விடயத்தில் தமிழக முதல்வரோ அல்லது அமைச்சர்களோ மட்டுமே தீர்மானித்து விடமுடியாது. அவர்களால் பரிந்துரைகளை மட்டுமே செய்ய முடியும். ஆகவே ஒட்டுமொத்த நாட்டின் கருத்துக்களை மையப்படுத்தியே வெளியுறவு சம்பந்தமான கொள்கைகளை வகுக்க முடியும்.

கேள்வி:- ஈழத்தமிழர்களுக்காக 35 வருடங்களாக உங்களின் குரல் உட்பட தமிழகத்தில் பல்வேறு குரல்கள் எழுந்தபோதும் அது தமிழக எல்லைகளை கடந்திருக்காத சூழலில் மய்யத்தின் அறிமுக நிகழ்விலேயே அண்டை மாநில முதல்வர்களுடன் நட்பு பாராட்டியுள்ள நீங்கள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவீர்கள்?

பதில்;- கண்டிப்பாக எனது உறவுகளுக்காக குரல் எழும். அது போர்க் குணமுடைய குரலாக இருக்காது என்பது தான் என்னுடைய நிலைப்பாடாகின்றது. ஏனென்றால், இலங்கை போன்ற பன்மடங்கு பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்தியா தனது சுதந்திரத்தினை அகிம்சை மூலம் நியாயமாகவும் சட்ட ரீதியாகவும் வென்றது.

அந்தக் படிப்பினை உங்களுக்கு நாங்கள் தருவதற்கு கடமைப்பட்டிருக்கின்றோம். அதனை கற்பீர்களா இல்லையா என்பது வேறு விடயம். ஆனால் அதனை வலியுறுத்திக் கூறவேண்டிய பாரிய கடமை எமக்கு உள்ளது. அந்த பாரிய கடமை உறவின் உரிமையால் ஏற்படுகின்றது.

கேள்வி:- தமிழக அரசியல் தளத்தில் இனத்துவம், சாதியம், திராவிடம், தமிழ்த் தேசியம், ஆன்மிகம் என்ற வாதங்கள் நிறைந்திருக்கையில் உங்களின் பயணம் எதனை மையப்படுத்தியதாக இருக்கும்?

பதில்:- மய்யத்தில் இருந்து கொண்டு இடது வலது நியாயங்களை கூறிக்கொண்டு இருக்க முடியாது. தராசின் முள் நடுவில் இருப்பது போன்று மய்யத்தில் இருந்து கொண்டு எந்தப்பக்கத்தில் நியாயம் இருக்கின்றது என்பதை உணர்வு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் புரிந்து கொண்டு அந்த தரப்புடன் நெருங்கி எதிர்த்தரப்புடன் வாதிடுவோம். இடது வலது போன்ற சிந்தனைகளின் கருவிகளாக மாறாது நியாயத்தின் பக்கம் நின்று மறுபடியும் நடுநிலைக்கு நாட்டினையே கொண்டு வருதான் “மய்யம்”. 

கேள்வி:- சினிமாத்துறையில் தங்களது ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு எடுக்கப்பட்ட விழாவில் கலந்துகொண்டிருந்த ரஜனிகாந் நீங்கள் பயணம் செய்யாத பதையில் தான் பயணித்ததால் தான் தன்னாலும் சாதிக்க முடிந்ததாக கூறியிருக்கின்ற நிலையில் தற்போது அரசியல் பிரவேச அறிவிப்பினை விட்டிருக்கின்றார். மக்களை மையப்படுத்தியதாக இருக்கின்ற இத்துறையில் நண்பர்கள் இருவரினது பயணம் எவ்வாறு அமையும்?

பதில்:- நண்பர் என்ற வகையில் அவருடைய அரசியல் பயணம் நல்லபடியாக அமைய வேண்டும் என்று கூறுவேன். எமது அரசியல் பயணம் மக்களின் உந்து சக்தியுடன் அதிவேகமாக சென்று கொண்டிருக்கின்றது. அடுத்த கட்டத்திற்காக பொறுமையுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.

(நேர்காணல்:- தமிழகத்திலிருந்து ஆர்.ராம்)