அமெரிக்காவில் விவாகரத்தாகி 50 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் பேரன், பேத்திகள் முன்னிலையில் தம்பதியினர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தைச் சேர்ந்தவ 83 வயதான ஹரால்ட் ஹோலண்ட்க்கும் 78 வயதான லில்லியன் பார்ன்ஸ்  என்பவருக்கும் கடந்த 1955ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

ஐந்து குழந்தைகளைப் பெற்று சந்தோசமாக வாழ்ந்து வந்த தம்பதியினர்  கடந்த 1967ஆம் ஆண்டு கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்ற இவர்கள் தனித்தனியே மறுமணமும் செய்து கொண்டனர்.

இருவருமே கடந்த 2015ஆம் ஆண்டு தங்கள் துணையை இழந்தனர். மகன், மகள்கள் திருமணமாகி சென்றதையடுத்து இருவரும் தனிமையில் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. எனவே அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக தங்கள் விருப்பத்தை இரு குடும்பத்தினரிடம் தெரிவித்து திருமணத்திற்கு அனுமதி பெற்றனர். இதையடுத்து எதிர் வரும் 14ஆம் திகதி  இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது குடும்பத்தார் திட்டமிட்டுள்ளனர்.

இத்திருமணம் குறித்து ஹோலன்ஸ் - பார்ன்ஸ் ஜோடி கூறுகையில்,

“கடைசி காலத்தை நாங்கள் இருவரும் ஒன்றாக கழிக்க விரும்புகிறோம்” என கூறினர். 

50 ஆண்டுகள் கழித்து மீண்டும் திருமணம் மூலம் கணவன் - மனைவியாகப் போகும் அந்த ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில்  வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.