தீவிர சைவ கொள்கையை கடைபிடிக்கும் நசிம் அக்தாம் என்ற பெண் யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிசூடு நடத்தி பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை அந் நாட்டு பொலிஸார்  வெளியிட்டுள்ளனர்.

பிரபல வீடியோ இணையதளமான யூடியூப் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று முன் தினம் அலுவலக வளாகத்தில் நுழைந்த பெண் ஒருவர் அங்கிருந்தவர்களை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதனை அடுத்து தாக்குதல் நடத்திய நசிம் அக்தாம் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் நசிம் அக்தாம் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தீவிர சைவ கொள்கைகளை கடைப்பிடித்த நசிம் அக்தாம் விலங்குகள் உணவுக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் கொல்லப்படுவதை தீவிரமாக எதிர்த்து பரப்புரை செய்து வருபவர். யூடியூப் தளத்தில் தனக்கென சேனல் ஒன்றை தொடங்கிய நசிம் அக்தாம் தனது கொள்கை மற்றும் பாரசீக கலாச்சாரங்களை வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சமீப காலமாக அவரது சேனலில் பதிவிடும் வீடியோக்களின் பார்வைகளுக்கு (views) ஏற்ப யூடியூப் நிர்வாகம் வருமானத்தை பகிர்ந்து தருவது இல்லை என அக்தாம் கருதியுள்ளார். இது தொடர்பாக  நசிம் அக்தாம்  தனது கணினியில் வைத்துள்ள பதிவுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான மூன்று நபர்களுக்கும் நசிம் அக்தாமுக்கும் தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை. எனவே மேற்கண்ட பிரச்சனை காரணமாக அவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் நசீம் அக்தாமுக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய முந்தைய செய்திக்கு,

யூடியுப் தலைமையகத்தில் பரபரப்பு ; தன்னைத்தானே சுட்டு பெண் துப்பாக்கிதாரி தற்கொலை