அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆறு முக்கிய  அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சியின் 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட பின்னரே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

குறிப்பிட்ட கடிதத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.திசநாயக்க, ஜோன் செனிவரட்ன, சுசில் பிரேமஜயந்த, அனுரபிரியதர்சன யாப்பா,தயாசிறி ஜயசேகர மற்றும் சந்திம வீரக்கொடி ஆகியோரை பதவி விலக்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொதுவான கருத்துடன்பாட்டுடன் அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை அமைச்சர்கள் சிலர் பகிரங்கமாக விமர்சிக்கின்றனர்  என தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களிலும் இவர்கள் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தில் இருந்துகொண்டே  அரசாங்கத்தை விமர்சிக்க அனுமதிப்பது மக்களின் ஆணைக்கு முரணானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிரான அமைச்சர்களை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ள ஆறு அமைச்சர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு  எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.