(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் முடியாது என்ற கருப்பொருளை என்னுடைய தலைமையிலேயே சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியின் போது கொண்டு சென்றோம். இதன்படி அதன் கருத்து ரணில் விக்கிரமசிங்கவினால் முடியாது என்பதல்ல. அப்போதும் தற்போதும் எதிர்க்கட்சியினருக்கு ரணில் விக்கிரமசிங்கவே பிரதான சவாலாகும்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வீழ்த்துவதற்கு பிரதான தடையாக இருப்பது ரணிலாகும். அதன்காரணமாகவே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வந்து பிரதமரை நீக்குவதே சதியாகும் என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நான் சுதந்திரக் கட்சியில் இருக்கும் போது 1999 ஆம் ஆண்டு ரணிலினால் முடியாது என்ற கருப்பொருளை உருவாக்கினோம். இதன்படி நானும் டலஸ் அழகப்ப‍ெரும, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் நாடுபூராகவும் சுவரொட்டி ஒட்டினோம். ஆனாலும் ரணிலால் முடியாது என்பதன் கருத்து ரணிலினால் எதுவும் முடியாது என்பதல்ல. அப்போது எமக்கு அரசியலில் இருந்த பிரதான சவால் வேறு யாரும் இல்லை அது ரணில் விக்கிரமசிங்கவாகும்.

அதன்பின்னர் தற்போது 20 வருடங்களுக்கு பின்னர் கூட அதே கருப்பொருள்தான் உள்ளது. எனவே அப்போதும் தற்போதும் எதிர்க்கட்சியினருக்கு ரணில் விக்கிரமசிங்கவே பிரதான சவாலாகும்.  இதன்படி நம்பிக்கையில்லா பிரேரண‍ை தோற்கடிக்கப்பட்டு விட்டது.  எனினும் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே கொண்டு வரப்பட்டுள்ளது. ஏனெனில் ஜனாதிபதியை வீழ்த்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியுமே தடையாக உள்ளது. இதன்படியே நம்பிக்கையில்லா பிரேரரணை கொண்டு வரப்பட்டுள்ளது.

அத்துடன் மத்திய வங்கி மோசடி தொடர்பில் விசாரணையை ஆரம்பித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே உரிய நடவடிக்கையை எடுத்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று கோப் குழுவிற்கு எதிர்க்கட்சி ஒருவரை நியமிக்காமல் ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவரை நியமித்து எமக்கு முன்செல்ல முடிந்திருக்கும். ஆனால் பிரதமர் அவ்வாறு செய்யவில்லை. திருடர்களை பிடிப்பதில் தீவிரமான மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவருக்கே கோப் குழுவின் தலைமை பதவியை வழங்கினார். 

எனவே 2019 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் நோக்குடனே கூட்டு எதிர்க்கட்சி இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. ரணில் விக்கிரமசிங்கவை அரசியலில் இருந்து நீக்கும் சதித்திட்டமாகும். 

அத்துடன் காணாமல் போனோர் விவகாரம் அலுவலகங்களை அமைத்துள்ளோம். இதற்காக  உரிய வகையில் நிதி ஒதுக்கீடுகளையும் செய்துள்ளோம். அத்துடன் வடக்கின் பிரச்சினைகள் குறித்து துரித கதியில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. இது தொடர்பாக  இந்த ஆண்டு இறுதிக்குள் உரிய செயற்பாட்டு கட்டமைப்பை ஏற்படுத்துவோம் என்றார்.