தமிழ் –சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் குடிபோதையில் வாகனம் செலுத்துவோரைக் கைது செய்ய விசேட நடவடிக்கை ஒன்று எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந் நிலையில் இந் நடவடிக்கையினை முன்னெடுக்க குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளின் அக்குற்றத்தை உறுதி செய்ய பயன்படுத்தப்படும் பலூன்கள் ஒரு இலட்சம் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் அவை தற்போது பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
அதன்படி அந்த பலூன்கள் நாளை முதல் தேவையான பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகம் செய்யப்படும் எனவும் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு 2922 பாரிய விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் அதில் 3100 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பொலிஸ் பேச்சாளர் அந்த ஆண்டில் மட்டும் 72819 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டதாக கூறினார்.
அவ்வாறு அவர்கள் கைது செய்யப்பட்டிருக்காவிட்டால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் அதிகரித்திருக்கும் எனவும் அவர் கூறினார். அதனால் குடி போதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.