(க.கிஷாந்தன்)

அமைச்சர் பழனி திகாம்பரம், பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் கலந்து கொண்ட நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டம் இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது.

நுவரெலியா நானுஒயா காந்தி மண்டபத்திற்கு அருகாமையில் அமைக்க தீர்மானிக்கப்பட்டிருந்த பொலிஸ் நியைத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு இங்கு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு கூட்டத்தில் இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், கே.கே.பியதாச, மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டதுடன் அமைச்சர்களான பழனி திகாம்பரம், நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் முத்து சிவலிங்கம், மயில்வாகனம் திலகராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வரவேற்பு உரையை நுவரெலியா மாவட்ட செயலாளர் எலன் மீகஸ்முல்ல வழங்கியதோடு இதன்போது அவர் இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆளும் கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவே உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகள் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் மரத் தூண்கள் அமைக்கப்பட்டவை என்பதால் தற்பொழுது அவை பழுதடைந்த நிலையில் இருக்கின்றன. எனவே அவை முறிந்து விழும் நிலையில் இருப்பதால் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக அவற்றை அகற்றி கொன்கிறீட் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மின்சார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.