சட்டவிரோதமாக வௌிநாட்டு நாணய தாள்கள் மற்றும் மாணிக்க கற்களை  இலங்கையில் இருந்து துபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட சீன பிரஜை  ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 61 வயதான நீர்க்கொழும்பு பிரதேசத்தில் சுற்றுலா விடுதியொன்றை நடாத்திச் செல்பவர்  என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் துபாய் நோக்கி பயணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழைந்த குறித்த சந்தேக நபரின்  பயணப்பொதியை சுங்க அதிகாரிகள் சோதனையிட்ட போது குறித்த பணத்தொகை மற்றும் மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி  ஒரு கோடியே 44 இலட்சத்து 23 ஆயிரத்து 143 ரூபாய் (1,44,23,143.33) என  சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.