உலகில் வாழும் உயிரினங்களில் ஏதோ ஒரு விலங்கு அழிவடைந்து சென்றுள்ளதென எவரும் சிந்திக்காது இருந்துவிடக்கூடாது. ஏனென்றால் மனித குலத்தின் அழிவும் அறியாமலேயே நிகழ்ந்து விடும். எனவே உலகில் அழிந்துவரும் உயிரினத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஏனெனில், விலங்குகளின் அழிவு மனிதகுலத்திற்கான எச்சரிகையாகவே அமையும்.  “சூடான்” என்று அனைவராலும் அறியப்பட்ட வெள்ளை ஆண் காண்டாமிருகம் அண்மையில் உயிரிழந்தது. 

இதன் மறைவு குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சூழலியலாளர்கள் பல்வேறு வகையிலான எச்சரிக்கைகளை விடுத்தனர். அதாவது மனிதர்கள் உயிர் வாழக்கூடிய வகையில் பூமியின் சமநிலையை பேணுவதில் வனாந்தரங்களைப் போன்று அதில் வாழும் விலங்கினங்களும் செல்வாக்கு செலுத்துகின்றன. அவ்வாறு வாழ்ந்து அழிந்த ஒரு இனத்தின் இறுதி ஆண் மகனாகவே “சூடான்” என்ற வெள்ளை காண்டாமிருகம் திகழ்கின்றது.

சரி இந்த காண்டாமிருகம் என்றால் என்ன ?

காண்டாமிருகம் என்னும் விலங்கு நிலத்தில் வாழும் யானையைப் போன்ற மிகப்பெரிய விலங்குகளில் ஒன்றும் தாவர உண்ணியும் கூட. தடித்த தோலும் பருத்த உடலும் பெருமளவு எடையையும் கொண்ட இப்பெரிய விலங்கு மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடவல்லது. இதனது ஆயுட்காலம் ஏறத்தாழ 60 ஆண்டுகள். எளிதில் சினமுற்று, கொந்தளிப்புடன் கடுமையாக எதிரிகளைத் தாக்கவல்லவை.

இந்த காண்டாமிருகங்கள் இயற்கையில் ஆபிரிக்க கண்டத்திலும் இந்தியா, ஜாவா, மற்றும் சுமத்ரா தீவுகளில் மட்டுமே இவை தற்போது உயிர்வாழ்கின்றன. ஆபிரிக்காவில் வாழும் காண்டாமிருகங்களுக்கு இரண்டு கொம்புகளும் ஆசிய கண்டப்பகுதியில் இந்தியா, ஜாவாவில் வாழும் காண்டாமிருகங்களுக்கு ஒரேயொரு கொம்பும் உண்டு. ஆனால் ஆசியாவின் சுமத்ரா தீவுகளில் வாழும் காண்டா மிருகங்களுக்கு இரட்டைக்கொம்புகளும் உள்ளன.

இதேவேளை, சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டாமிருகம் மற்றும் வெள்ளை காண்டாமிருகம் என 5 காண்டாமிருக வகைகள் உள்ளன.

தற்போதும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் ஐந்து வகையான காண்டாமிருகங்களை 3 வகையாகப் பிரிக்கலாம். அவை ஆபிரிக்காவைச் சேர்ந்த வெள்ளை, கறுப்பு காண்டாமிருகங்கள். இவை 5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிளியோசீன் (Pliocene) என்னும் காலத்தில் வெவ்வேறு இனமாகப் பிரிந்தன. 

இவை இரண்டுக்கும் உள்ள முதன்மையான வேறுபாடு இவற்றின் வாயின் அமைப்பிலுள்ளது. வெள்ளை காண்டாமிருகத்திற்கு வாயின் உதடுகள் பரந்து விரிந்து புல் மேய ஏதுவாக உள்ளது. 

ஆனால் கறுப்பு காண்டாமிருகத்தின் வாய் சற்று குவிந்து கூராக இருக்கும். வெள்ளை காண்டாமிருகங்கள் மூக்கின் மீது இரட்டைக் கொம்புகள் கொண்டவை என இரு வகை காண்டாமிருகங்களும் ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவை. 

மீதி உள்ள மூன்றில், இந்தியா, ஜாவாத் தீவுகளில் வாழும் காண்டாமிருகத்திற்கு ஒற்றை கொம்புள்ளது. இவை இரண்டாவது பிரிவு ஆகும். இந்திய காண்டாமிருகமும் ஜாவா காண்டாமிருகமும் ஏறத்தாழ 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தனி இனங்களாகப் பிரிந்தன. 

இவ்வற்றைவிட மிகச் சிறியதான சுமத்ரா காண்டாமிருகங்கள் மூன்றாவது வகை ஆகும். இந்த சுமத்ரா வகைக்கு, ஆபிரிக்க காண்டாமிருகங்களைப்போல் இரட்டைக் கொம்புகள் உண்டு. இது உயரமான மலைப்பகுதிகளில் வாழ வல்லமையுடையதால் இதன் உடலில் முடி அதிகமாக இருக்கும். வேட்டையாடி கொல்லப்படுவதால் இன்று மிகவும் அழியும் தறுவாயில் இவை உள்ளன.

காண்டாமிருகத்தின் உடல் பருமனை ஒப்பிடும்போது இதன் மூளையின் எடை பாலூட்டிகளில் மிகச்சிறியது. யானைக்கு அடுத்தபடியாக, வெள்ளை காண்டாமிருகங்களும் இந்திய காண்டாமிருகமும், நீர்யானையுமே உலகிலேயே எடை மிகுந்த தரை விலங்குகள் ஆகும்.

வெள்ளை காண்டாமிருகம் பெரிய உடலும் சிறிய கழுத்தும், பெரிய முகமும் பரந்த நெஞ்சுப்பகுதியும் கொண்ட பெரும் விலங்கு. இதன் எடை 3000 கிலோவை தாண்டக்கூடியது. கறுப்பு காண்டாமிருகங்கள் தான்சானியா, சாம்பியா, சிம்பாப்வே, மொசாம்பிக், நமீபியா, தென் அங்கோலா, மேற்கு போட்சுவானா, ஆகிய இடங்களில் உள்ள வறண்ட அல்லது சிறிது வறண்ட பகுதிகளில் வாழ்கின்றன. கறுப்பு காண்டாமிருகம் 800 முதல் 1400 கிலோகிராம்  எடையுடையதாக இருக்கும். பெண் விலங்குகள் ஆணைவிட எடை குறைவாக இருக்கும். 

இந்திய காண்டாமிருகம் இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலும், நேபாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் வாழ்கின்றன. இது இமயமலையின் அடிவாரத்திலுள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றன. 

அமைதியான விலங்காகக் கருதப்படும் இந்த காண்டாமிருகங்கள் கொம்புகளுக்காக அதிகளவில் வேட்டையாடப்படுகின்றன. காண்டாமிருகத்தின் கொம்புகள் கான்சர், பக்கவாதம், வலிப்பு நோய்கள் போன்றவற்றை குணமாக்கும் வல்லமையுள்ளதாக நம்பப்படுவதால் மருந்திற்காக அவை கொல்லப்படுகின்றன. 

இதன் காரணமாக, 1900 ஆம் ஆண்டில் 5 இலட்சமாக இருந்த காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 1970 ஆண்டுகளில் மட்டும் 70 ஆயிரமாக குறைந்தது. இவற்றில் அதிகம் பாதிக்கப்பட்டது வெள்ளை காண்டாமிருகங்கள். காரணம் இவை ஏனைய காண்டாமிருகங்களைவிட சாதுவானவைகளாகவும் கௌரவம் மிக்கவையாகவும் கருதப்பட்டதால் இவை அதிகம் கொன்று குவிக்கப்பட்டன.

இந்நிலையில் உலகின் இறுதி ஆண் வெள்ளை காண்டாமிருகமான கென்ய விலங்குகள் காப்பகத்தில் வாழ்ந்து வந்த “சூடான்“ எனும் வெள்ளை காண்டாமிருகமும் உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்தது.

சூடானில் பிறந்த குறித்த இறுதி ஆண் வெள்ளை காண்டாமிருகமான சூடான் இறுதிவரை துப்பாக்கி ஏந்திய இராணுவ வீரர்களின் பாதுகாப்பில் கிழக்கு ஆபிரிக்காவில் இருக்கும் கென்யாவிலுள்ள ஒல் பெஜெட்டா என்னும் விலங்குகள் காப்பகத்தில் வாழ்ந்து வந்தது.

உலகிலேயே மூன்று வெள்ளை காண்டாமிருகங்கள் தான் வாழ்ந்து வந்தன. அவற்றில் இரண்டு பெண் காண்டாமிருகங்கள் ஆகும். சூடான் மட்டுமே ஆண் காண்டா மிருகமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு கென்யா வந்த இந்த சூடான் மூலம் வெள்ளை காண்டாமிருகங்களை இனப்பெருக்கம் செய்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பலன் ஏதும் கிட்டவில்லை.

வெள்ளை காண்டாமிருகங்கள் அதிகமாக 50 வருடங்கள் வரை உயிர்வாழக் கூடியவை.  சூடானுக்கு 45 வயதாகியதால் இந்நிலையில், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. மிகவும் நோய்வாய்ப்பட்டு, பலவீனமாக காணப்பட்ட சூடானின் சதைகள், எலும்புகள் சிதைந்தன. அதனுடைய தோல் பகுதியில் பெரும் காயங்கள் ஏற்பட்டன, வலது காலிலும் தொற்று ஏற்பட்டு இருந்தது.

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி இறுதியாக உயிர்வாழ்ந்த 45 வயதுடைய வெள்ளை காண்டாமிருகமும் உடல்நலக் குறைவால் இவ்வுலகைவிட்டுப் பிரிந்தது.

சூடானின் மறைவையடுத்து தற்போது இரண்டு பெண் வெள்ளை காண்டாமிருகங்கள் மட்டுமே உலகில் வாழ்கின்றன. எனவே, இனி எதிர்காலத்தில் செயற்கை முறையில் பெண் காண்டாமிருகங்களை கருத்தரிக்க வைத்தே, இந்த இனத்தை பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

சூடானுக்கு முதல் ஆங்கலிஃபூ என்னும் வெள்ளை ஆண் காண்டாமிருகம் கலிபோர்னியாவின் சந்தியாகோவின் பூங்காவில் சில வருடங்களுக்கு முன் இறந்தது.

இறுதியாக இறந்த ஆண் வெள்ளை காண்டாமிருகம் குறித்து பல வனவிலங்கு ஆர்வலர்களும் தமது கருத்துக்களை சமூகவலைத் தளங்களிலும் ஊடகங்களிலும் தெரிவித்து வந்துள்ளனர்.

எவ்வாறு இருந்தாலும் உலகிலுள்ள ஏனைய உயிரினங்களை பாதுகாக்க வேண்டியது மனித இனத்தின் முக்கிய பொறுப்பாக காணப்படுகின்றது.

மனிதனின் வாழ்க்கைக்கு மாறான பழக்கங்களால் குறிப்பாக பொலித்தீன் பாவனை, இயற்கைக்கு அச்சுறுத்தலான மனிதனின் செயற்பாடுகள் அணுவாயுத உற்பத்திகள் மற்றும் அதன்பயன்பாடுகள் போன்றன உலகில் அருகிவரும் மிருக இனங்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்வது மட்டுமல்லாது மனித இனத்தின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாகியுள்ளது.

உலகின் சமநிலையைப் பேணுவதில் தாக்கத்தை செலுத்தும் இந்த இயற்கை உயிரினங்களின் அழிவுகள், காலப்போக்கில் மனித இனத்தின் இருப்பிற்கும் சவாலாகும் என்ற அச்ச நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. 

( வீ.பிரியதர்சன் )