உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பிற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவைப் பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுவிட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கந்தர்மடம், அரசடி வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகம் இன்று  முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வின் போது ஊடகவியலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். 

இதற்குப் பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் பதிலளிக்யைில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஈ.பி.டி.பி.யுடன் தாங்கள் பேரம் பேசவில்லை என்றும், ஈ.பி.டி.பி.க்கும் தமக்கும் நேரடியாக ஆதரவு தரவில்லை என்றும் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். 

ஆனால் என்னதாக இருந்தாலும் ஒருமித்து நியமனங்கள் நடைபெறவில்லை என்று தெரிகின்றது. பதவி வகிக்கின்றவர்கள் ஆட்சியை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும். சாவகச்சேரி நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, ஈ.பி.டி.பி.யின் ஆதரவு வழங்கியது என்பது தொடர்பில் சரியாக நான் அறியவில்லை.

என்னவாக இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைத்தால், கூட்டமைப்புக் கொள்கைகளை கைவிட்டு சுயநலங்கள் தான் எமக்கு முக்கியம் என்ற கருத்து ஏற்படும் என்பதுதான் என்னுடைய அவதானிப்பாக உள்ளதென  அவர் மேலும் தெரிவித்தார்.