நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அட்டன் டிக்கோயா நகரசபைக்கு தலைவர், உபதலைவரை தெரிவுசெய்வதற்கான கூட்டம் இன்று மத்திய மாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் எச்.எம்.யு.பி.ஹேரத்தின் தலைமையில் நடைபெற்றது. 

பொதுஜன பெரமுன அங்கத்தவர் ஒருவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்க முன்வந்ததையடுத்து சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதன்போது இ.தொ.கா.வைச் சேர்ந்த அங்கத்தவர்கள் காசுக்காக குறித்த உறுப்பினர் கட்சி மாறியதாக கூறி கோசமிட்டதனை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் சிறிது நேரம் தாமதமாகின.

இதனைத்தொடர்ந்து சபைத்தலைவர் தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு அமைதியாக்கப்பட்டதை தொடர்ந்து வெளிப்படையான வாக்கெடுப்புக்கு செல்லுமாறு சபையில் தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து வாக்கெடுப்புக்கு செல்லும் போது மீண்டும் இ.தொ.கா அங்கத்தவர்கள் வாக்கெடுப்பில் ஈடுபட மறுத்ததால் மீண்டும் தாமதமாகின.

 அதனைத்தொடர்ந்து ஆணையாளர் அங்கத்தவர்கள் வாக்களிக்காத பட்சத்தில் வாக்கெடுப்பில் இருந்து விலகியதாக கருதி வாக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்ததை தொடர்ந்து வாக்கெடுப்புக்கள் இடம்பெற்றன. 

இதன்போது ஐக்கியத் தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்ட அழகமுத்து நந்தகுமாருக்கு எட்டு வாக்குகளும் இ.தொ.கா .சார்பாக போட்டியிட்ட பாலச்சந்திரனுக்கு எட்டு வாக்குகளும் கையுயர்த்தி அளிக்கப்பட்டதை அடுத்து இருவரும் சமமான வாக்குகள் பெற்றதால் குழுக்கள் முறையில் தலைவரை தெரிவுசெய்ய முடிவாகின. 

இந்த முடிவினை தொடர்ந்து தலைவராக எம்.பாலச்சந்திரனும்  உபதலைவராக ஏ.ஜே.எம்.பாமிஸும் தெரிவுசெய்யப்பட்டனர்.  

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்களும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு இரு ஆசனங்களும் கிடைத்து தேர்தலில் வெற்றிபெற்றன.

இந்த தேர்தலில் இ.தொ.கா. வுக்கு 4 போனஸ் ஆசனங்களும் பொதுஜன பெரமுனவுக்கு இரண்டு போனஸ் ஆசனங்களும் இலங்கை கொமினியூஸ்ட் கட்சிக்கு இரண்டு ஆசனங்களும் கிடைக்கப்பெற்றன. 

இதில் கொமினியூஸ்ட் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இ.தொ.கா. வுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர். எனினும் பொதுஜன பெரமுனவில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் ஐ.தே.க வுக்கு ஆதரவளித்ததாலேயே இந்த வாக்குவாதம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இவ்வாக்களிப்பின் பின் இ.தொ.கா ஆதரவாளர்கள் அட்டன் நகரசபைக்கு முன்னால் கூடி பட்டாசு கொழுத்தி ஆராவாரத்தில் ஈடுபட்டதுடன் ஊர்வலமாக நகரைச்சுற்றி வலம் வந்தனர். இதனால் நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.