"உள்ளூராட்சி மன்றங்களுக்கான தெரிவுகள், விட்டுக்கொடுப்புகள் மற்றும் புரிந்துணர்வுகளுடன் ஒற்றுமையான முறையில் முன்னெடுக்கப்பட்டு ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமாக வடமாகாணம் திகழ வேண்டும்" என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம்,

"உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அந்தந்த கட்சி வெற்றி பெற்ற இடங்களில் அவர்களையே ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு ஏனையோரும் ஆதரவளிக்க வேண்டும்.

இதன்மூலம் இந்த மண்ணில் ஒரு சுமூகமான சூழலை ஏற்படுத்த முடியும். ஒரு சுமூகமான நிலையை தோற்றுவிக்க வேண்டும் என்பதே தற்போதைய தேவையாக உள்ளது.

அனைத்திலும் முரண்பட்டுக் கொண்டு இந்த உள்ளூராட்சி மன்றங்களை தொடர்ந்து நிர்வகிக்க முடியாது. எனவே தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு ஏனையோர் ஆதரவு வழங்கி சிக்கல் இல்லாத நிர்வாகத்தை வடக்கில் ஏற்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.