வவுனியா நகரப்பகுதியில் நிதி நிறுவனம் நடத்துவதாக தெரிவித்து வறிய மக்களிடம் பணமோசடி செய்த நபர் வழக்குத் தவணைகளுக்கு ஆஜராகாமல் மறைந்திருந்த நிலையில் பருத்தித்துறை பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர மத்தியில் விவசாய கால்நடை மீன்பிடி ஊக்குவிப்பு நிறுவனம் என்ற பெயரில் வறிய மக்களிடம் ஆசை வார்த்தைகளைக்கூறி கடன் வழங்கும் திட்டமொன்றினை அறிமுகம் செய்து பல கோடி ரூபா நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது ஏமாற்றப்பட்ட பொது மக்கள் குறித்த அலுவலகத்தில் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியதுடன் அங்கிருந்து மக்களை ஏமாற்றிய குழுவை வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதனையடுத்து இவ்வாறு பணம் கொடுத்து ஏமாற்றமடைந்த சுமார் 200 இற்கும் அதிகமானவர்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு குறித்த ஏமாற்றுப்பேர்வழியை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனையடுத்து முக்கிய சூத்திரதாரியான ஆனந்தராஜா என்பவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இதன் நிமிர்த்தம் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் சரீரப்பிணை வழங்கப்பட்டிருந்த ஆனந்தராஜா என்ற சந்தேக நபர் கடந்த 3 வழக்குகளுக்கு வவுனியா நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை பிணையாளர்களுக்கும் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டதன் பிரகாரம் பருத்தித்துறையில் குறித்த பண மோசடி மன்னன் ஆனந்தராஜா மறைந்திருப்பதாக  தெரியவந்ததையடுத்து பிணையாளர்கள் சிலர் இன்று பருத்தித்துறைக்கு சென்று குறித்த நபரை பிடித்து பருத்தித்துறை பொலிஸாரிடம் கையளித்ததுடன் வவுனியா பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

பல கோடி ரூபாவை வறிய மக்களிடம் ஏமாற்றிய குறித்த நிறுவனத்தின் தலைவரான ஆனந்தராஜா கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்காக தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டிருந்ததுடன் பட்டதாரிகள் சஙகம் ஒன்றையும் உருவாக்கி அரசியல் செயற்பாட்டிலும் ஈடுபட்டுவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.