வியாட்நாமில் ஹோசிமின் நகரில் உள்ள 20 மாடிகளை கொண்ட குடியிருப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

வியாட்நாமின் ஹோசிமின் நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள 8ஆவது மாவட்டத்தில் 20 மாடி குடியிருப்பில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மாடி குடியிருப்பிலுள்ள  ஒரு வீட்டில் பிடித்த தீ மற்ற வீடுகளுக்கும் வேகமாக பரவியுள்ளது. தீப் பரவலையடுத்து  குடியிருப்பு வாசிகள் ஜன்னல் வழியாக கயிறுகளை கட்டியபடி இறங்கியும், பலர் கீழே குதித்தும் உள்ளனர்.

இரண்டு மணிநேரம் போராடி மீட்புக்குழுவினர் தீயை அணைத்துள்ளனர்.

இவ் விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாகவும் 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் நகர  பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.