கொழும்பின் பல்வேறு பகுதிகளில் ஹெரோயினுடன் இருவர் இன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

Image result for கொழும்பில் ஹெரோயினுடன் இருவர் கைது

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, 

கொழும்பின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இருவர் ஹெரோயினுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்பர் தோட்டம் மற்றும் பேர வீதி சந்தியில் வைத்து வாழைத்தோட்ட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மதியவேளையில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்சுற்றிவளைப்பின் போது 38 வயதுடைய வாழைத்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஆணொருவர் 2 கிராம் 110 மில்லிகிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் இன்று மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  இதன்போது நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்ட பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

அதைபோல் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளியாவத்தை பகுதியிலும் வத்தளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்சம்வத்தின் போது 27 வயதுடைய மோதர பிரதேசத்தைச் சேர்ந்த ஆணொருவர் 10 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த வேளையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் தடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் குறித்த சந்தேகநபர் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.