(லியோ நிரோஷ தர்ஷன்)

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு இரு தரப்பு ஒப்பந்தங்களில் இன்று கைச்சாத்திட உள்ளார். 

பாக்கிஸ்தானின் 78வது குடியரசு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால அங்கு சென்றுள்ள நிலையில் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளார். 

தேசிய பாதுகாப்பு கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்பினை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. 

இலங்கை தேசிய பாதுகாப்பு கல்வியல் நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத் உபாய முறைகள் கல்வியல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. 

மேலும் அரச சேவையாளர்களின் தரத்தினை விருத்தி செய்யும் நோக்கில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் மற்றுமொரு ஒப்பந்தத்தை பாகிஸ்தானின் அரச கொள்கைகள் தொடர்பான தேசிய கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட உள்ளது.

அத்துடன் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞான துறைகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் புரிந்துணர்வினை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடப்பட உள்ளது. 

இலங்கையின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பாகிஸ்தானின் இரசாயன மற்றும் உயிரியல் விஞ்ஞான சர்வதேச நிலையம் ஆகியவற்றுக்கு இடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. 

அதே போன்று இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இரு தரப்பு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட உள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர சேவைகள் , பயிற்சிகள் மற்றும் தொழில் அபிவிருத்தி தொடர்பில் ஒத்துழைப்புக்களை விருத்தி செய்து கொள்ளும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. 

இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் மற்றும் பாகிஸ்தானின் வெளிநாட்டு சேவைகள் அகடமி ஆகியவற்றுக்கு இடையிலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.

புதிய முதலீடுகள் மற்றும் இருதரப்ப உறவுகள் தொடர்பாக பாகிஸ்தான் தலைவர்களுடன் இதன் போது ஜனாதிபதி பரந்தளவில் கலந்துரையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.