கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவன விவகாரத்தில் தவறு இடம்பெற்றுவிட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

இவ்விவகாரம்  வெளியில் வந்து 4 நாட்களாக அமைதியாக இருந்த மார்க் ஸுக்கர்பேர்க் தற்போது தனது அமைதியை கலைத்து 'தவறு நடந்துவிட்டது' என ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மார்க் ஸுக்கர்பேர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் தகவலொன்றை பதிவிட்டுள்ளார். 

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா விவகாரம் தொடர்பில் நான் உங்களுடன் முக்கிய விடயமொன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது. அதை செய்யமுடியாவிட்டால் நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய முடியாது. 

தகவல் திருட்டு எப்படி நடந்தது என்பதை புரிந்துகொள்ள முயற்சித்துவரும் வேளையில் இனிவரும் காலத்தில் இவ்வாறு ஒன்று நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன். 

ஆனால், இது போன்ற தகவல் திருட்டுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துவிட்டோம் என்பது ஒரு நற்செய்தி. அதேவேளையில், நாங்கள் சில தவறுகளையும் செய்துவிட்டோம். அதை திருத்திக்கொள்ள வேண்டும்.

நான் தான் பேஸ்புக்கை ஆரம்பித்தேன்.  அந்த தளத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு நானே பொறுப்பாவேன். இந்த கசப்பான அனுபவத்தின் மூலம் பாடம் கற்றுக் கொள்வோம்.

இனிவரும் காலங்களில் இது போல தகவல் திருட்டை பேஸ்புக் சகித்துக்கொள்ளாது. கேம்பிரிட்ஜ் அனலடிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை பேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்யும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக பேஸ்புக் 5 கோடி பயனாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

அமெரிக்க ஜனாதிபதி  தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இந்த நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பத்தன்மை குறைந்து அதன் மதிப்பு வெகுவாககுறைவடைய ஆரம்பித்துள்ளது. 

இந்நிலையில், பேஸ்புக் இழைத்த தவறால், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், பேஸ்புக் பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், வாட்ஸ் அப்பின் துணை நிறுவுனரான பிரைன் அக்டன் தனது டுவிட்டர் பக்கத்தில், 

பேஸ்புக்கை நீக்க வேண்டிய நேரம் இது எச்சரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து  இந்த விவகாரம் தற்போது பூதாகரமாயியுள்ளது.