வவுனியாவில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு இளைஞர்களை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா நீதிமன்றம் , வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை, மாவட்ட நீதிவான் நீதிமன்றம், பாடசாலைகள் முன்பாக தரித்து நிற்கும் மோட்டார் சைக்கிளின் டிக்கியை ( பொருட்கள் வைக்கும் பெட்டகம் ) மாற்று சாவி மூலம் திறந்து தொலைபேசிகள் ,பணம் என்பவை திருடப்படுவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிந்த சோமஜீத் தலமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் சுபசிங்கவின் வழிகாட்டலில் பொலிஸ் கொஸ்தாபல்களான கேரத் (16494), நிசங்க (31222), அசோக (33743), பெமசிரி (55511), பொலிஸ் கொஸ்தாபல்களான நிஜாம் (54963) , சிவராசா (53207),தரங்க (12865) , குணசிங்க (49689) , இந்திக்க (15628) விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது வவுனியா நகரில் வைத்து  சாந்தசோலை, அண்ணாநகர் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இரு சந்தேக நபர்களை கைதுசெய்ததுடன் இவர்களிடமிருந்து 15 கையடக்க தொலைபேசிகளும், 30,000 ரூபா பணமும், தேசிய அடையாள அட்டை, திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு முன்பாக 8 மோட்டார் சைக்கிளிலிருந்தும் , மாவட்ட நீதிமன்றம் முன்பாக 6 மோட்டார் சைக்கிலிருந்தும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலத்திற்கு முன்பாக தரித்து நின்ற 3 மோட்டார் சைக்கிளிலிருந்தும் வவுனியா சைவப்பிரகாசா பாடசாலைக்கு முன்பாக தரித்து நின்ற ஒரு மோட்டார் சைக்கிளிலிருந்தும் திருடப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும், இவர்கள் கட்டாரில் இருந்து சில வாரங்களுக்கு முன்னரே வவுனியாவிற்கு வந்தாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் இவ்வாறு திருட்டுச் சம்பவம் ஏதேனும் இடம்பெற்றிருந்தால் உடனடியாக முறைப்பாட்டினை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.