(எம்.நியூட்டன்) 

தொண்டர் ஆசிரியர்களாக நீண்ட காலமாக சம்பவத் திரட்டுப் பதிவேடுகள் முறையாக பதிவு செய்யப்பட்டும் எமக்கு நியமனம் கிடைக்கவில்லை. ஆனால் பதிவேடுகள் இல்லாதவர்களுக்கு நியனமங்கள் வழங்கப்படுகிறது. இது யாருடைய அரசியல் தலையீடு. வடமாகாண முதலமைச்சராகிய நீங்கள் இதனை கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொண்டராசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 வடமாகாண முதலமைச்சர் அலுவலக முன்பாக தொண்டராசிரியர்கள் போராட்டம் மேற்கொண்ட நிலையில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார். 

இதன்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள். 

இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

எங்களால் தெரிவு செய்யப்பட்ட நீங்கள் எங்களுடைய கோரிக்கைகளை கருத்தில் எடுத்து நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகின்றோம். குறிப்பாக வங்கியில் வேலை செய்யும் ஒருவருக்கு எவ்வாறு தெண்டராசிரியர் நியமனம் வழங்க முடியும். 

சிவில் பாதுகாப்பு பிரிவின் முன்பள்ளி ஆசிரியராக கடமையாற்றுபவர்களுக்கு எவ்வாறு நியமனம் வழங்க முடியும். 1992 ஆம் ஆண்டு பிறந்தவருக்கு எவ்வாறு தெண்டராசிரியர் நியமனம் வழங்க முடியும். பாடசாலை அதிபர்  சம்பவத் திரட்டுப் பதிவேடு போலியாக பதிவு செய்ய முடியும் அவ்வாறும் நடைபெற்றுள்ளது. 

மேலும் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் எவ்வாறு ஒருவர் நன்றாகப் படிப்பிக்கின்றார் என்பதை எழுத்தில் கொடுக்க முடியும். இவ்வாறு பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. 

மேலும் நேர்முகத் தேர்வு நடைபெற்றபோது முறையான பல ஆவணங்கள் வழங்கியுள்ள போதும் எமக்கான நியனமங்கள் கிடைக்கவில்லை. எனவே இவ்வாறான முறைகேடுகளை விசாரித்து நீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.