(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவா மனித உரிமை பேரவையில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற  இலங்கை தொடர்பான  ஒரு உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்பினருக்கும்  தென்னிலங்கையிலிருந்து கலந்துகொண்ட   எளிய  அமைப்பின் பிரதிநிதிகளுக்குமிடையில் மீண்டும்  வாதப்பிரதிவாதங்கள்   ஏற்பட்டன. 

 

இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஐக்கிய நாடுகள் விசாரணை அலுவலகத்தை அமைக்க முடியுமா என  புலம்பெயர் அமைப்பினர் கேள்வி எழுப்பினர்.  இதன்போதே சர்ச்சை ஏற்பட்டது.  

எளிய அமைப்பின்  பிரதிநிதிகள்  ஏற்பாடு செய்திருந்த  இந்த   உபகுழுக்கூட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும்  கலந்து கொண்டிருந்தனர்.  

அத்துடன்   இந்த  உபகுழுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த புலம்பெயர் அமைப்புக்களின்  பிரதிநிதிகள் எளிய அமைப்பினரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.  

முதலில் கருத்து வெளியிட்ட எளிய அமைப்பின்  பிரதிநிதிகள் யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள்   தொடர்பாக உங்களுக்கு என்ன தெரியும் என  புலம்பெயர் அமைப்பினரைப் பார்த்து  கேட்டார்.  

அப்போது குறுக்கிட்ட புலம்பெயர் அமைப்பின்   பிரதிநிதி மணிவண்ணன்  எங்களுக்கு எல்லாம் தெரியும் என்றார். 

தொடர்ந்து உரையாற்றிய எளிய அமைப்பின் பிரதிநிதிகள் தயவு செய்து எங்களைப் பேசவிடுகள் என்று கூறி தமது கருத்துக்களை முன்வைக்க  ஆரம்பித்தனர். 

இந்த நிகழ்விற்கு  ரியர் எட்மிரல்  சரத் வீரசேகர தலைமைதாங்கினார். அப்போது எளிய அமைப்பின் பிரதிநிதியொருவர் குறிப்பிடுகையில்  நீங்கள் உங்கள் கேள்விகளை எங்களிடம் கேட்கலாம் என குறிப்பிட்டார். 

இதன்போது புலம்பெயர் அமைப்புக்கள் கேள்விகளை தொடுத்தனர். அதனையடுத்து  எளிய அமைப்பின் பிரதிநிதி சரத் வீரசேகர குறிப்பிடுகையில்;

இலங்கையில் இருந்த ஐ.நா. அதிகாரிகூட யுத்தத்தில்  7ஆயிரம் பேர் அளவிலேயே உயிரிழந்திருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். 

அதாவது  புலி உறுப்பினர்களையும் சேர்த்தே   இந்த  எண்ணிக்கையிலேயே உயிரிழந்திருக்கலாம் என தெரிவித்திருந்தார்.  அது ஒரு உத்தியோகப்பூர்வ ஆவணம். அது அரசாங்கத்தின் புள்ளிவிபரங்களுடன்  ஒத்துப்போகின்றது.  

மே 13 ஆம் திகதிவரை  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  7 ஆயிரம் அளவிலேயே  இருந்தது.  இவ்வாறு சரத் வீரசேகர உரையாற்றிக்கொண்டிருந்த போது புலம்பெயர் அமைப்பினர் அவரை இடைமறித்து குறுக்கு கேள்விகளை எழுப்பினர்.  அப்போது யுத்தம்  தொடர்பான சில விடயங்களை   நாடுகடந்த தமிழீழ  அரசாங்கத்தின் பிரதிநிதியான  மணிவண்ணன்  வெளியிட்டுக்கொண்டிருந்தார்.  அந்த சந்தர்ப்பத்தில் அது உங்கள் கருத்து என சரத் வீரசேகர குறிப்பிட்டார். 

அந்த கட்டத்தில் கருத்து வெளியிட்ட மணிவண்ணன் குறிப்பிடுகையில்,

 இந்த புள்ளிவிபரங்களில்  பிரச்சினை இருப்பதனாலேயே   சுயாதீன விசாரணையை கோருகின்றோம். பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன. அதனால் விசாரணையை நடத்துவோம் என்றார்.  அத்துடன் இதன்போது இரண்டு தரப்புக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் மேசையில் தட்டிய  எளிய அமைப்பின் பிரதிநிதிகள்   உங்கள்  கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டுவிட்டது.  

 நாங்கள் மிகவும் புனிதமான மனித உரிமை பேரவை என்ற  இடத்தில் இருக்கின்றோம்.  எங்களிடம் ஒரு கதை  இருக்கிறது. உங்களிடம்  ஒரு கதை இருக்கிறது.   நாங்கள்   ஒரு நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். அதற்கென சில கொள்கைகள் உள்ளன.   நாம் எமது பக்கத்தை கூறுகின்றோம். இன்னொரு  வடிவம்   வேறுவகையாக   இருக்கலாம் என்றார். 

இந்நிலையில்    நாடுகடந்த அரசாங்கத்தின் சார்பில் மணிவண்ணன் உரையாற்றுகையில்,

 நீங்கள் ஒரு பக்கத்தையே  எடுக்கின்றீர்கள்.  இலங்கையில்  அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்கான உரிமை உள்ளது. அதனை கேள்விக்குட்படுத்த முடியாது.   2008 ஆம்ஆண்டுக்கு முதலே ஐ.நா. காண்காணிப்பாளர்களை வெளியேற்றிவிட்டீர்கள். 

நீங்கள்  ஒரு இனப்படுகொலை யுத்தத்தை நடத்தினீர்கள். நீங்கள் ஏன் யுத்த சூனியவலயத்தில்  தாக்குதல்  நடத்தினீர்கள்.  நீங்கள் ஏன் அங்கு   ஆயுதப்பிரயோகங்களை நடத்தினீர்கள். ஏன் மருத்துவ மனைகள் மீது ஷெல்தாக்குதல்களை நடத்தினீர்கள்.  நீங்கள் மூன்று இலட்சம் மக்களை விடுதலை செய்ததாக கூறுகின்றீர்கள்.  தமிழ் மக்கள் உங்களை அழைத்து தம்மை விடுவிக்குமாறு கோரினார்களா?  உணவு அங்கு அனுப்பப்படவில்லை.  நீங்கள் அந்த மக்களை   செங்கம்பளத்திலா வரவேற்றீர்கள்.  

ஆனால்  அவர்களை முகாம்களுக்குள் போட்டீர்கள்.  இப்படியான  நல்ல பணிகளை   முன்னெடுத்திருந்தால் ஏன் சர்வதேச  பொறிமுறைக்கு  அஞ்சுகின்றீர்கள். குற்றமொன்றும் செய்திருக்காவிடின் ஏன்  சர்வதேச விசாரணைக்கு அஞ்சுகின்றீர்கள்.   ஐ.நா. அதிகாரிகளை ஏன் இலங்கையில் அனுமதிக்காமல் இருக்கின்றீர்கள்.  வடக்கு, கிழக்கில்  உங்களால்  விசாரணை அலுவலகத்தை   ஸ்தாபிக்க  முடியுமா என நான் சவால் விடுக்கின்றேன்.  ஏன் தமிழ்  மக்களின் காணிகளை அபகரித்தீர்கள்? இவ்வாறு மணிவண்ணன் கேள்வி எழுப்பும் போதும்  எளிய அமைப்பினர் குறுக்கீடு செய்தனர். 

என்னை  கேள்வி எழுப்புவதற்கு  இடமளியுங்கள் என்று கோரிய  மணிவண்ணன்  எனக்கு கேள்வி  எழுப்ப   இடமளியுங்கள்  என்று கேட்டுவிட்டு   கேள்வி எழுப்புகையில் உங்களிடம்  பெண்கள்  தமது பிள்ளைகளையும் கணவன் மாரையும் ஒப்படைத்தார்கள். ஆனால் அவ்வாறு  பொறுப்பேற்கப்பட்ட   பட்டியலைக்கூட  நீங்கள் இதுவரை வெளியிடவில்லை. ஏன்  அந்த  ஆவணத்தை வெளியிடாமல் இருக்கின்றீர்கள்.  ஏன் இந்தக்கேள்விக்கு பதிலளிக்காமல்  இருக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.