(எம்.எப்.எம்.பஸீர்)

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸ், அவரது நிறுவனமான பேப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் தமக்கு பிணைகோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் இன்று மேன்முறையீட்டு மனுவொன்றினை தாக்கல்  செய்துள்ளனர்.

 ஏற்கனவே நீதிவான் நீதிமன்றம் பிணை  நிராகரித்த நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றில் பிணைகோரி மீளாய்வு மேன் முறையீடு ஒன்றினை இவர்கள் தாக்கல் செய்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே தற்போது மேல் நீதிமன்ற உத்தரவையும் மீளாய்வு செய்து பிணைகோரி அவ்விருவரும் மேன் முறையீட்டு நீதிமன்றில் பிணை விண்ணப்பம் செய்துள்ளனர்.

 சட்டமாஅதிபர், குற்றப்புலனாய்வுப் பிரிவின் நிதிக்குற்ற விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி ஆகியோர் இம்மீளாய்வு மேன் முறையீட்டு மனுவின் பொறுப்புக்கூறத்தக்க தரப்பாக பெயரிடப்பட்டுள்ளனர்.