(ஜெனிவாவிலிருந்த எஸ். ஸ்ரீகஜன்)

ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில்  உபகுழுக்கூட்டம் நடைபெற்றது.   இதன்போது இலங்கை மனித   உரிமை நிலைமை குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த உபகுழுக்கூட்டத்தில்  தென்னிலங்கையிலிருந்து ஜெனிவா வந்துள்ள   எளிய அமைப்பின் பிரதிநிதிகள்  மற்றும் சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.  

இந்த  உபகுழுக்கூட்டத்தில்  எளிய அமைப்பின் பிரதிநிதியான நாலக்ககொடஹேவா உரையாற்றுகையில்,

இலங்கையில்  முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து 1991 ஆம் ஆண்டு 48 மணிநேரத்தில்  வெளியேற்றப்பட்டனர் என்று கூறிக்கொண்டிருக்கும்போது அவருக்கு  பேசுவதற்கு  இடையூறு விளைவிக்கப்பட்டது.   இருந்தும் தன்னை முதலில் பேச விடுமாறு  நாலக்ககொடஹோ  கூறி   பேச முயற்சித்தார். பின்னர் அவருக்கு  பேசுவதற்கு  சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது. 

 அவர் உரையாற்றுகையில்;

பயங்கரவாத அமைப்பான புலிகள் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை  48 மணிநேரத்தில் வெளியேறுமாறு கோரினர்.   அவ்வாறு  வெளியேற முடியாத 600 முஸ்லிம்கள்  கொல்லப்பட்டனர்.   இவ்வாறு தான் புலிகள் செயற்பட்டனர்.  

தமிழ், முஸ்லிம் மக்கள் எமது சகோதரர்கள்,    இலங்கையில் பிறந்தவர்களுக்கு  இலங்கை சொந்தமான நாடாகும்.  அங்கு எந்த பிரச்சினையும் இல்லை.   அந்த  உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.  இலங்கை பிரச்சினை குறித்து பேசுபவர்கள்  எனது நாடு  புலிகளின் பயங்கரவாதத்தில் சிக்கியிருந்ததை  மறந்துவிட்டீர்கள். 

எத்தனை சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று    நாலக்ககொடஹேவா உரையாற்றிக்கொண்டிருக்கும்போது   உபகுழுக்கூட்டங்களை நடத்திக்கொண்டிருந்தவர்கள்  அவரின் பேச்சை முடிக்குமாறு கோரினர். இதனையடுத்து   எளிய அமைப்பின் பிரதிநிதிகளுக்கும்  உபகுழுக்கூட்டத்தை    நடத்திக்கொண்டிருந்தவர்களுக்குமிடையில் கடும்  வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதன்போது   புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் ஏன் உண்மையை மறைக்கின்றீர்கள் என எளிய அமைப்பினரைப்பார்த்து கேள்வி எழுப்பினர். அந்த சந்தர்ப்பத்தில்  உபகுழுக்கூட்டத்தில்  களேபர நிலைமை ஏற்பட்டதுடன்   கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அனைவரும் கூச்சலிட ஆரம்பித்தனர்.  

இந்த சூழலில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர உபகுழுக்கூட்டத்தை  நடத்தியவர்கள் முயற்சித்தபோதும்  முடியாமல் போனது.   அமைதியாக இருங்கள், அமைதியாக இருங்கள்  என  கூட்டத்தை நடத்தியவர்கள் கோரிக்கை விடுத்தபோதும் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. புலம்பெயர் அமைப்பினரும்    எளிய அமைப்பின் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அதாவது எளிய அமைப்பின் பிரதிநிதிகள் உபகுழுக்கூட்டத்தின் நடைமுறைகளை மீறுவதாக  புலம்பெயர் அமைப்பினர் குற்றம்சாட்டினர்.  இதன்போது  மற்றுமொரு எளிய அமைப்பின் பிரதிநிதி  உரையாற்றுகையில்,

தமிழ் மக்களின்  கொலை தொடர்பில் பேசுகிறீர்கள். எவ்வளவு சிங்கள மக்கள் கொல்லப்பட்டனர் என்று உங்களுக்குத்  தெரியுமா? எங்களிடம்  சாட்சியங்கள் உள்ளன. கர்ப்பிணித்தாய்மார்கள் கொல்லப்பட்டனர்.  குழந்தைகளை கொன்றனர்.  இவ்வாறு  அந்த பிரதிநிதி உரையாற்றிக்கொண்டிருக்கையில் மீண்டும்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.  அப்போத எளிய அமைப்பின் பிரதிநிதி  பல ஆவணங்களை எடுத்து சபையினருக்கு காண்பித்தார்.   

இதன்போது  கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த அனைவரும் எழுந்து நின்று கூச்சலிட ஆரம்பித்தனர். இரண்டு தரப்பினரும்  மாறிமாறி குற்றச்சாட்டுக்களை  முன்வைத்தனர். எளிய அமைப்பினரும்    புலம்பெயர் அமைப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தனர். இரண்டு தரப்பினரும்  எழுந்து நின்று கடும் வாதப்பிரதிவாதங்களில் ஈடுபட்டனர்.  

இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த   உபகுழுக்கூட்டத்தை தலைமைதாங்கி நடத்திக்கொண்டிருந்தவர்கள் முயற்சித்த போதும் அது  கைகூடவில்லை. தொடர்ந்து  புலம்பெயர் அமைப்பினரும் எளிய அமைப்பினரும் வாக்குவாதப்பட்டுக்கொண்டே  இருந்தனர்.   தொடர்ந்து இரண்டு தரப்பினருக்கிடையில் வாய்த்தர்க்கம் முற்றியநிலையில் அருகருகே சென்று  சத்தமிட ஆரம்பித்தனர்.  

இந்நிலையில்  உபகுழுக்கூட்டத்தை தலைமைதாங்கி நடத்தியவர்கள் செய்வதறியாது  திகைத்திருந்தனர்.  அப்போது இரண்டு தரப்பினரும் பயங்கரவாதிகள், பயங்கரவாதிகள் என கூச்சலிட்டுக்கொண்டனர்.  வந்து உங்கள் இடங்களில் அமர்ந்து உபகுழுக்கூட்டங்களை  நடத்த உதவுங்கள் என்று கூறியபோதும் அவர்களினால்  நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.   இதனையடுத்து கூட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதுடன் உபகுழு கூட்டம் முடிவுறுத்தப்பட்டது.