(நா.தினுஷா)

நடப்பு  ஆண்டின் முதல் மூன்று மாதத்திற்குள் 8 ஆயிரத்திற்கு அதிகமான காச நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நாட்டில் சுமார் 14 ஆயிரம் பேர் வரையில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய காச நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இலங்கையில் 2035 ஆண்டில் காச நோயை முற்றாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய காச நோய் தடுப்பு பிரிவு  மேலும் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி உலக காச நோய் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. 

இதனை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் தேசிய காச நோய் தடுப்பு பிரிவினர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். 

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் காச நோய்க்கான விசேட வைத்தியர் கீர்த்தி குணசேகர கருத்துத் தெரிவிக்கையில், 

இலங்கையில் அதிகம் காச நோயினால் பாதிக்கபடும் மாவட்டமாக கொழும்பு மாவட்டம் இணங்காணப்பட்டுள்ளதோடு கம்பஹா களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களே விரைவில் காச நோய் தொற்றுக்கு உள்ளாகின்றன. 

கொழும்பு மாவட்டத்தில் முக்கியமாக மட்டகுளி , கிராண்ட்பாஸ் உள்ளிட்ட பிரதேசங்கள் அதிகம் காசநோயினால் பாதிக்கப்படும் பிரதேசங்களாக மாறியுள்ளன.

இது வரையில் இலங்கையில் 8 ஆயிரத்துக்கு அதிகமான காச நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் இறப்பு வீதத்தை பார்க்கும்போது காச நோயினால் மட்டும்  400 இலிருந்து 500 வரையிலான நோயாளர்கள் இறக்கினறனர். 

நோய் குறித்து மக்கள் வைத்திய ஆலோசனைகளை முறையாக பெற்றுக்கொள்ளாமையே இவ்வாறு மரண வீதம் அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும்.  காச நோய் என்பது இலகுவாக தோற்றம் பெறகூடியதாகும். அதேபோன்று பல்வேறு முறைகளில் இந்த காச நேயை பரப்பும் பக்ரீறியா சுகதேகியான ஒருவரின் உடலைத் தாக்குகின்றது. 

இன் நோயின் தன்மை தீவிரம் அடையும் போது குணப்படுத்துவதென்பது கடினமானவொன்றாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.