வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கிகளுடன் நபரொருவர் நேற்று காலை களுத்துறை வட்டார குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால்  குருளுபந்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருதாவது, 

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைதுப்பாக்கிகளை சட்டவிரோதமான முறையில் தம்மிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பதுரளிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருளுபந்த பிரதேசத்தில் வைத்து களுத்துறை வட்டார குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு இவரை கைது செய்யும் வேளையில் இவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட விசேட கைதுப்பாக்கிகள் இரண்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் சந்தேகநபரை கைதுசெய்த களுத்துறை வட்டார குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் அவரை மேலதிக விசாரணைகளுக்காக பதுரளிய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். 

இந்நிலையில் பதுரளிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது குறித்த நபர் 27 வயதுடைய குருளுபந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. 

மேலும் குறித்த சந்தேகநபரை இன்று களுத்துறை நீதவான் நீதமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுரளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.