கொழும்பு - மெஸேன்ஜர் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் காரில் சென்ற இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றன.

இவ்வாறு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர் கொழும்பு - தெமட்டகொடை பகுதியைச் சேர்ந்த 42 வயதான அன்டனி ராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழந்தவரின் மனைவி ஆவார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அருகிலுள்ள சி.சி.டிவி கமரா பதிவை வைத்து துப்பாக்கி பிரயோகம் செய்த நபரின் மோட்டார் வண்டியையும் அதன் இலக்கத்தையும் அடையாளம் கண்டுள்ளனர்.

இதன் படி கறுப்பு நிற மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரே சிவப்பு நிற காரில் வந்த இருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.

மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் சட்டவிரோத ஹெரோயின் விற்பனை என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை மற்றும் ஆமர் வீதி பொலிஸார் இணைந்து மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.