பதுளை – பசறை வீதி 3 ஆம் கட்டை வேவெஸ்ஸ தோட்ட மாணிக்கவள்ளி பிரிவில் அமைந்துள்ள 7 ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பின் லயன் அறையொன்று இன்று அதிகாலை மின்சார ஒழுக்கின் காரணமாக தீப்பற்றி முற்றாக சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் இடம்பெறும் போது குறித்த குடியிருப்பு அறையில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் 9 தொடக்கம் 17 வயதிற்கிடைப்பட்ட 3 சிறுமிகளும் நித்திரையில் இருந்துள்ளனர். 

திடீரென ஏற்பட்ட தீப்பரவல் வெடிப்புச் சத்தத்தை கேட்டு அயலவர்கள் உடனடியாக வீட்டு ஜன்னலை உடைத்து பாதுகாப்பாக அவர்களை மீட்டுள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிசார் பதுளை மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் ஊர் பொது மக்களின் உதவியுடன் தீயை அணைத்து நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். 

இச்சந்தர்ப்பத்தில் வீட்டிலுள்ள மின்சார உபகரணங்களும் பெறுமதி வாய்ந்த பொருட்களும் முற்றாக சேதமடைந்துள்ளன. சுமார் 7 இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.