(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்டுள்ள உலக நாடுகளில் வாழ் மக்களின் மகிழ்ச்சி தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையில் இலங்கைக்கு 116 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளதுடன் பின்னலாந்துக்கு முதலாம் இடம் வழங்கப்பட்டுள்ளது.

பூகோள  ரீதியாக மகிழ்ச்சியை அளவிடும் ஒரு முறையாக உலக மகிழ்ச்சி பற்றிய அறிக்கை ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகின்றது. 

உலக மகிழ்ச்சி பற்றிய அறிக்கை 2018 156 நாடுகளில் அவர்களின் மகிழ்ச்சி மட்டத்திலும் 117 நாடுகள் அவர்களது குடியகல்வு மகிழ்ச்சியிலும் வெளியிடப்படுகின்றது. 

இவ்வறிக்கையின் படி கடந்த ஆண்டு 120 ஆவது இடத்தைப் பிடித்திருந்த இலங்கை இம்முறை 116 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இதேவேளை இந்தியாவை விட இலங்கை முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும்.   

மேலும், இத்தரப்படுத்தலில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளதோடு, நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. 

மொத்த உள்நாட்டு உற்பத்தி,  தனிநபர் வருமானம்,  சமூக உதவிகள்,  ஆரோக்கியமான ஆயுட்காலம்,  சமூக சுதந்திரம்,  நன்கொடை வழங்கும் தன்மை,  ஊழல் இல்லாத நிலை முதலான காரணிகளைக்  அடிப்படையாகக் கொண்டு உலக மகிழ்ச்சி அறிக்கை ஒவ்வொரு வருடமும் தொகுக்கப்படுகிறது.