(நா. தனுஜா)

கொரிய அரசாங்கத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் இலங்கையின் முதலாவது கடல் மற்றும் கடல் அறிவியல் பல்கலைக்கழகம் மேலும் வலுப்படுத்தப்படவுள்ளது. கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தினால் இலங்கையில் கடல் மற்றும் கடல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கென 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளதோடு, பல்கலைக்கழகத்தின் உள்ளார்ந்த செயற்பாட்டு திட்டங்களை கட்டமைப்பதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியும் வழங்கப்படவுள்ளது.

கடல் மற்றும் கடல் அறிவியல் பல்கலைக்கழக அபிவிருத்தி திட்டம் நான்கு வருட கால திட்டமாகும். இதன் முதற்கட்டப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படும். அதன்படி இப்பல்கலைக்கழகத்தின் உட்பிரிவுகளான மீன்பிடி மற்றும் கடல் அறிவியல் முகாமைத்துவம், பொருளாதார மற்றும் வள முகாமைத்துவம் ஆகியவை விரிவாக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்யப்படும் என கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் இலங்கைக்கான உதவி வதிவிடப் பிரதிநிதி சொங் யோங்ஷிக் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையானது சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலான கடல் பிராந்தியம், மீன்கள் மற்றும் கடல் வளம், முருகைக்கற்பாறைகள், பெற்றோலியம் என பல்வேறு வகையான கடல்சார் வளங்களை கொண்டுள்ளது.

தற்போது இலங்கையானது 517 ஆயிரம் பரப்பளவிலான பொருளாதார வலயத்தினை கொண்டுள்ளதோடு, அதனை மேலும் விரிவுபடுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றது. இலங்கையின் பூகோள கட்டமைப்பானது தெற்காசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கான துறைமுக வசதியினை வழங்கத்தக்க கேந்திரமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தனை வளங்கள் காணப்படுகின்ற போதிலும் அவை முழு வினைத்திறனுடன் உபயோகிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. 

இலங்கை அரசாங்கம் தேசிய மீன்பிடி தொழில்நுட்ப கற்கை நிலையத்திற்கு பதிலாக 2015 ஆம் ஆண்டில் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் கடல் மற்றும் கடல் அறிவியல் பல்கலைக்கழகத்தை நிர்மாணித்தது. இக்கடல் மற்றும் கடல் அறிவியல் சார்ந்த துறையானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெருமளவான பங்களிப்பினை செய்து வருவதோடு, வேலைவாய்ப்பினையும் வழங்கி வருகின்றது. எனவே குறித்த துறையினை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகும்.

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் திட்டப்படி கடல் மற்றும் கடல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் பாடநெறிகள், பயிற்சிகள் தொடர்பில் கொரிய கடல் அறிவியல் வல்லுனர்களால் கண்காணிக்கப்பட்டு சீரமைக்கப்படும். அத்தோடு பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் விரிவாக்கப்படும். மேலும் கடல் அறிவியல் தொடர்பான முதுமாணி பட்டப்படிப்பிற்கான வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். இவை யாவும் துரிதமாக செயற்படுத்தப்படவுள்ளன என தெரிவித்தார். அத்தோடு இத்திட்டத்தினை அபிவிருத்தியை நோக்கிய இலங்கையின் பயணத்தின் மைல்கல்லாக கருத முடியும் என அவர் குறிப்பிட்டார்.