மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட காக்கையன் குளம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரு சிறுவர்கள்  நேற்று  மாலை தமது வீட்டிற்கு பின் பகுதி காணியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்ட கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் சகோதரர்களான முஹமட் சம்ரான் மற்றும் முஹமட் அஸ்ஹான் என தெரிய வந்துள்ளது.

குறித்த சிறுவர்களான சகோதரர்கள் இருவரும் நேற்று  மாலை காக்கையன் குளம் கிராமத்தில் உள்ள தமது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்துள்ளனர்.

இதன் போது தாய் தனது மூன்றாவது பிள்ளையுடன் இருந்துள்ளார். தந்தை கூலித் தொழில் நிமித்தம் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார்.

வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குறித்த இரு சிறுவர்களும்  நீண்ட நேரமாக காணாமல் போன நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டைச் சுற்றி தேடியுள்ளனர்.

இதன் போது அவர்களுடைய வீட்டிற்கு பின் பகுதியில் காணப்பட்ட காணியில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த தோட்டக்கிணற்றினுள் சடலமாக காணப்பட்டனர்.

உடனடியாக மடு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த  பொலிஸார் குறித்த இரு சடலங்களையும் மீட்டு நேற்று இரவு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இன்று காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற மாவட்ட பதில் நீதவான் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலங்களை பார்வையிட்டதோடு, மரண விசாரனைகளையும் மேற்கொண்டார்.

பிரேத பரிசோதனையின் பின் குறித்த இரு சடலங்களையும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.