ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் தளவாய்  பிரதேசத்தில் உள்ள பத்தினி அம்மன் கோயில் மற்றும் கொம்மாதுறை காளியம்மன் கோயில் ஆகியவற்றிலிருந்த காணிக்கை உண்டியல்களைத் திருடிச் சென்ற சந்தேக நபர்கள் இருவரையும் இம்மாதம் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொம்மாதுறையிலுள்ள காளி கோயில் உண்டியல் ஞாயிற்றுக்கிழமை இரவு திருட்டுப் போயிருந்தபோது வெல்லாவெளியைச் சேர்ந்த 18 வயதான இளைஞன் உண்டியல் மற்றும் சுமார் 7,179 ரூபாய் காணிக்கைப் பணத்துடன் கைது செய்யப்பட்டிருந்தான்.

இதேவேளை தளவாய் பத்தினியம்மன் ஆலய உண்டியல் திருட்டுச் சந்தேக நபரான திருகோணமலை வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் சமீப சில நாட்களாக மட்டக்களப்பு ஏறாவூர் தளவாய்ப் பிரதேசத்திற்கு வந்து ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட பத்தினியம்மன் உண்டியலில் இருந்து சுமார் ஆயிரத்து இருநூறு ரூபாய் பெறுமதியான நாணயக் குற்றிகளும் தாள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.

இச்சம்பவங்கள் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.