“தமிழில் திரும்ப நடிக்க வரப்போறீங்களாமே' னு பலரும் கேட்குறாங்க. ஆமாம், எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு!’’ என்று கூறுகிறார். பிரபுதேவா.

‘எங்கள் அண்ணா’ படத்துக்கு பிறகு தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் நடிக்க வருகிறார், பிரபுதேவா. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வரவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகிக்கொண்டிருக்கும் பிரபுதேவா வழங்கிய நேர்காணல்.

நீங்களும், ஏ.எல்.விஜய்யும் இணைந்து படத் தயாரிப்பு பணியில் இருக்கும் சூழலில் நீங்கள் ஹீரோ அவர் இயக்குநர் என்ற நிலை எப்படி உருவானது?

தயாரிப்பு நிறுவனம் தொடங்கலாம்னு முடிவெடுத்தப்போ முதல் படத்துக்கு இயக்குநர் பிரியதர்ஷனை கொண்டு வந்து சேர்த்ததே ஏ.எல்.விஜய்தான். தயாரிப்பாளர் என்பதால் நிறைய கதைகளை கேட்கத் தொடங்கினேன். அப்போ விஜய்யும் கதைகள் சொன்னார். அவர் சொன்னதுல ஒரு கதை ரொம்பவே பிடித்தது. அந்தக் கதைக்கு ஹீரோவை தேர்வு செய்யும் வேலையில் இறங்கினோம். அப்போதுதான் இயக்குநர் விஜய்யும், தயாரிப்பு குழுவில் இருந்தவங்களும், ‘நீங்களே இந்தக் கதையில நடிக்கலாமே?’ன்னு சொன்னாங்க. என்னை ரொம்பவும் ஈர்த்த கதை. நான் தயாரிப்பாளர். ஹீரோ 'ப்ரீ'. என்னுடன் சோனு சூட், தமன்னா நடிக்கிறாங்க. இம்மாதம் 'ஷூட்டிங்' ஆரம்பம். புனே, மும்பை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களுக்கு கிளம்பறோம்.

படத்தின் கதை என்ன?

இது ‘த்ரில்லர்’ கலந்த கொமடி படம். 'எமோஷனல்' அதிகம் இருக்கும். கணவன், மனைவிக்குள் இருக்கும் அன்பை புதிய கோணத்தில் வெளிப்படுத்தும். நவீனமான நகர வாழ்க்கையை விரும்பி வரும் சிலருக்கு படத்தில் செய்தி சொல்லியிருக்கோம். இதுபோன்ற படத்தை இயக்கணும்னு எனக்கும் விருப்பம் உண்டு. இப்போ நடிக்கிறேன். அதேபோல, படத்துக்கு 4 இசையமைப்பாளர்களை வைத்து இசையமைக்கும் வேலைகளும் நடந்து வருகிறது.

முதன்முறையாக தமன்னா உங் களுடன் நடிக்கிறாரே?

ஆமாம். தமன்னாவோடு சேர்ந்து ஒரு பாட்டுக்கூட நான் 'கொரியோ கிராப்' செய்ததில்லை. முதன்முறையாக தமன்னா என்னோடு படத்தில் நடிக்கிறார். இதில் நடிக்க தமன்னாவும் ஆர்வமாக இருக்கிறார். படத்தில் அவருக்கு மிக முக்கியமான கதாபாத்திரம்.

பொலிவூட்டில் பரபரப்பான இயக்கு நராக இருக்கும் நீங்கள், தமிழில் மற்றொரு இயக்குநரிடம் உங்களை ஒப்படைக்கப் போகிறீர்களே?

சமீபத்தில்கூட இந்தியில் ‘ஏபிசிடி’ படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் இயக்குநர் என்ன எதிர்பார்த்தாரோ அதை மட்டும்தான் செய்தேன். நடன இயக்குநராக வேலை பார்க்கும்போதும் அந்தப் படத்தின் இயக்குநரோட தேவை என்ன என்பதை புரிந்து அதை செய்வேன். இந்தப் படத்துக்கும் அப்படித்தான். ஒருவரை நம்பி நம்மை ஒப்படைக்கிறோம். அப்படி இருக்கும்போது அவர் என்ன சொல்கிறாரோ அதைத்தானே செய்யணும்.

‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் தொடங்கிய 3 படங்கள் இப்போது எந்த நிலையில் உள்ளன?

இயக்குநர் பிரியதர்ஷனின் படம் முடிந்தது. அதை திரைப்பட விழாக்களுக்கு அனுப்பும் வேலைகளில் இயக்குநர் இருக்கிறார். ‘வினோதன்’ படம் 75 சதவீதம் முடிந்தது. அடுத்து லஷ்மண் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிக்கவிருக்கும் படத்தை விரைவில் தொடங்கவுள்ளோம். அதோடு என் நடிப்பில் திட்டமிட்டுள்ள படத்தின் வேலையும் இணைந்துள்ளது.

தங்கர் பச்சான் இயக்கத்தில் நீங்கள் நடித்த ‘களவாடிய பொழுதுகள்’ படம் ரிலீஸாவது தள்ளிப்போகிறதே?

நல்ல படம். அது ரிலீஸாக வேண்டும் என்ற ஆர்வத்தோடு நான் இருக்கிறேன். அதுக்கு சரியான நேரம் அமையும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரையும் போல எனக்கும் இருக்கிறது.