இலங்கைக்கு கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் முயற்சிப்பதாக ஜப்பானிய பிரதமர் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான சுகாதார சேவை ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு உதவி வழங்கும்போது முடிந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் கடன் அல்லாத நிதியுதவிகளை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபே தெரிவித்தார்.

ஜப்பானுக்கு அரச முறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கும், ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபேவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று பிற்பகல் இடம்பெற்றபோதே ஜப்பானிய பிரதமர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜப்பான் இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு பெற்றுத்தரும் ஒத்துழைப்பு தொடர்ச்சியாக எதிர்காலத்திலும் வழங்கப்படும் என ஜப்பானிய பிரதமர் உறுதியளித்தார்.

இதன்போது துறைமுக அபிவிருத்திக்கு முன்னுரிமையளிப்பதுடன், ஏற்கனவே கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் அபிவிருத்திக்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் ஒத்துழைப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் மின்சக்தி உற்பத்திக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாக தெரிவித்த ஜப்பானிய பிரதமர், அதிவேக வீதிக்கட்டமைப்புக்களின் நிர்மாணத்திற்கும் உதவி வழங்குவதாக இதன்போது குறிப்பிட்டார்.

ஜப்பானின் விசேட கைத்தொழில் செயற்பாடுகளின் பங்களிப்பையும் இலங்கைக்கு வழங்க முடியும் என ஜப்பானிய பிரதமர் இதன்போது தெரிவித்தார். 

அதேபோன்று இலங்கையின் சுகாதார துறையின் அபிவிருத்திக்கு அவசியமான தொழில்நுட்ப உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கும் ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு ஜப்பானிய பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.

இலங்கையின் இடர்முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கும், கழிவுப்பொருள் முகாமைத்துவ செயற்திட்டத்திற்கும் உதவி வழங்குவதாக ஜப்பானிய பிரதமர் உறுதி அளித்தார்.

பாதுகாப்பு மற்றும் கடற்படை செயற்பாடுகளிலும் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்களை இதன்போது நினைவுகூர்ந்த ஜப்பானிய பிரதமர், இந்து சமுத்திர வலய நாடுகளிடையே ஜப்பானிய அரசாங்கத்தின் இந்த உதவி இலங்கைக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இது தொடர்பாக ஜப்பானிய பிரதமருக்கு விசேடமாக நன்றி தெரிவித்தார்.

இருநாடுகளுக்கிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துதல் தொடர்பாக இதன்போது தலைவர்கள் நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இலங்கையில் அரசதுறையில் முதலீடு செய்தல் மட்டுமல்லாது, அரச மற்றும் தனியார் ஆகிய இருதுறைகளினதும் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜப்பானிய பிரதமர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த விஜயத்தினால் இலங்கைக்கும் ஜப்பானுக்குமிடையில் ஆதிகாலம் முதல் பேணப்பட்டுவரும் நெருங்கிய நட்புறவில் மேலும் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

இருநாடுகளுக்குமிடையே இருதரப்பு தொடர்புகளை மேலும் உறுதிசெய்து கொள்வதற்கு அரச முறை விஜயமொன்றினை விடுத்தமைக்காக ஜப்பானிய பிரதமருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஜீ7 மாநாட்டின்போது வலுப்பெற்ற ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான தொடர்புகள் இந்த விஜயத்தின் மூலம் மேலும் உறுதியடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

அத்தடன் கடந்த ஜீ7 மாநாட்டின் வெற்றியை நினைவூட்டிய ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமருக்கு அதற்காக நன்றி தெரிவித்தார்.

நேற்றைய தினம் அகிஹிதோ சக்கரவர்த்தியுடன் இடம்பெற்ற சந்திப்பினை கௌரவத்தோடு நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இதன்போது தமக்கு வழங்கப்பட்ட அமோக வரவேற்பிற்கும் நன்றி தெரிவித்தார்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தருமாறு ஜப்பானிய பிரதமருக்கு ஜனாதிபதி, அழைப்பு விடுத்ததுடன் ஜப்பானிய பிரதமரும் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்.

இரு அரச தலைவர்களுக்குமிடையிலான இருதரப்பு கலந்துரையாடலின் இறுதியில் ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான சுகாதார சேவைகள் தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

டோக்கியோ நகரில் அமைந்துள்ள ஜப்பானிய பிரதமரின் அலுவலகத்திற்கு விஜயம்செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு  ஜப்பானிய பிரதமர் ஷிங்சோ அபே, மகத்தான வரவேற்பு அளித்தார்.

அதன் பின்னர் இராணுவ அணிவகுப்பு மரியாதை சகிதம் உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு மிகுந்த அபிமானத்தோடு இடம்பெற்றமையானது இருநாடுகளுக்குமிடையிலான தொடர்பினை தெளிவாக எடுத்துக் காட்டியது.

உத்தியோகபூர்வ வரவேற்பின் இறுதியில் இரு அரச தலைவர்களும் சுமூக கலந்துரையடலில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் ஜப்பானிய பிரதமரினால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் பிரதான கலந்துரையாடல் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அரச தலைவர்களின் குழு புகைப்படமும் எடுக்கப்பட்டது.