முன்னாள் உளவாளி ரசாயன விஷம் மூலம் தாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ரஷ்யா உடன் மோதல் முற்றியுள்ள நிலையில், 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரிட்டன் கெடு விதித்துள்ளது.

ரஷ்யாவின் இராணுவ உளவுப்பிரிவில் 66 வயதுடைய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவர் அதிகாரியாக பணியாற்றியவர் . இவர் சில ரஷ்ய உளவாளிகளை இங்கிலாந்து உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார். 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அவரை 2010 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசு மீட்டு அடைக்கலம் கொடுத்தது. 

தற்போது பிரிட்டனில் வசித்து வரும் ஸ்கிர்பால், கடந்த 4 ஆம் திகதி சலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு வெளியே தனது 33 வயதுடைய மகள் யூலியாவுடன் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களது உடலில் விஷம் ஏற்றியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இருவரும் மருத்துவமனையில் கவலைக்கிடமான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பிரிட்டன் அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே, தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக ரஷ்யா தனது விளக்கத்தை அளிக்க வேண்டும் என பிரிட்டன் கோரியது. அமெரிக்க அதிபர் டிரெம்பும் இவ்விவகாரத்தில் பிரிட்டனுக்கு சார்பாக பேசினார்.

ஆனால், பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை மறுத்த ரஷ்யா இது தொடர்பாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இதனால், ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷ்யாவே பொறுப்பு என பிரிட்டன் உறுதியாக தெரிவித்தது.

இந்நிலையில், பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் தெரசா மே, ஸ்கிர்பால் மற்றும் அவரது மகளுக்கு விஷம் ஏற்றப்பட்டதற்கு ரஷ்ய அரசுதான் கொலைமுயற்சி குற்றவாளியாகும் என தெரிவித்தார். 23 ரஷ்ய தூதரக அதிகாரிகளும் பிரிட்டனை விட்டு வெளியேற வேண்டும். 

ரஷ்யாவுடனான உயர் மட்ட தொடர்பை துண்டிக்க வேண்டும் என்ற பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையை நான் ஏற்கிறேன்.

ரஷ்ய வெளிவிவகார  அமைச்சர் செர்கெய் லாவ்ராவ் பிரிட்டன் வருவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் திரும்ப பெறுகிறோம் என தெரசா மே தெரிவித்தார்.